கவிதைக்காரனின் காதல் குறிப்பு

காதலுக்கென ஒரு
கவிதையாவது எழுதிவிடவேண்டும்..
நாட்பட்டிருந்த இயலாமையை
தாசித் தோழியிடம் சொல்லியிருந்த
கவிதைக்காரனுக்கு...
காதலிக்கச் சொல்லிப் போயிருந்தாள்
அவள்...

இவனும் எழுதித்
தொலைத்த எல்லாவற்றிலும்
தவறாமல் கோர்த்துக்கொண்டன
இதழ்நீரும்.. பின்கழுத்து வியர்வையும்
எதிரமர்கையில்
எதேச்சையாய் வழிந்து பெருகிய
அவளது மார்புகளும்...

இது காதலா என
உமிழ்ந்து போயிருந்தவர்களின்
எச்சில் துடைத்துவிட்டு
எது காதல்.....? எனக் கேட்பதற்குள்
நெடுதூரம் போய்விட்டிருந்தார்கள்
அவர்கள்....

படித்து முறுவலித்த
தாசித்தோழியும்... எழுத்துக்களை
அவைகளாக்கவே முயன்று
நிர்வாணம் தரித்துக்கொண்டே
கேட்டிருந்தாள்...

என்ன நிகழ்கிறதுஉனக்குள்.....?

உந்தப்படுகிறேன்...! அவன்
சொல்லியிருந்தது அவள் கண்களைப் பார்த்து
என அவளுக்கும் புரிந்திருந்தது....

ஆலிங்கனங்கள் கழிந்தும்
கண்களிலிருந்து கண்கள் எடுத்திருக்கவில்லை
அவன்.. உந்தப்படுகிறேன் என
உளறிக்கொண்டே தூங்கிப் போயிருந்தான்..

எதுவோ ஒன்று
கலைத்துப்போட.. மூன்றாம் சாமத்தில்
அவசரமாய் எழுதிக் கொண்டிருந்தான்
கவிதைக்காரன்..

காதலென்பது...
உடனிருப்பது...!. உயிரோடிருப்பது.....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (15-Mar-15, 9:02 am)
பார்வை : 140

மேலே