வெட்டியான் பார்வை -Mano Red

மயான அமைதி..!!
அங்கே தியானமிருக்க
யாரும் வரப்போவதில்லையென
வெட்டியானுக்கு தெரியும்..!!

கேவலமாய் இறந்தவன்
ஊர்வலமாய் வருகிறான்,
என மனதில் சிரித்தபடி
எதிர்நோக்கி இருந்தான்..!!

கடைசியாய் முகம் பார்த்து ,
அடங்கியவனை
சொந்தமெல்லாம்
அடக்கிவிட்டுப் போக,
அவனுடன் பேசியதில்
வெட்டியான் அன்றிரவை
வெட்டியாக போக்கவில்லை..!!

உன் பொல்லாப் பாவ,புண்ணியம்
உனக்கு மிச்சம்..!!
கால் பணம்,
முழத்துண்டுடன்,
உன் வாய்க்கரிசி மட்டுமே
எனக்கு மிச்சம்..!

மீசை முறுக்கி திரிந்தவனை
மார்பில் மிதித்து
விறகில் ஏற்றினான்,
எச்சில் கை நீட்டாதவனின்
கையை இறுக்கி
தீக்கு விருந்தாக்கினான்..!!

அடக்க யாருமின்றி
ஆட்டமாய் ஆடி
வாழ்திருப்பான் போல,
சூட்டில் எலும்புகள்
புடைத்து எழும்பியதால்
அடித்து மீண்டும்
நொறுக்கி படுக்க வைத்தான்..!!

நாற்றம் பிடித்த
அவன் வாழ்க்கை கதையை,
கருகிய தீ நாற்றம்
காற்றெல்லாம் பரப்பியதில்
காட்டின் காது நிரம்பியது..!

வேக வேகமாய்
உடல் வேக வேக
கொண்டது கொடுத்தது
உண்டது உடுத்தது என
எல்லாமும் வெந்து விட்டது..!!
முடி சூடிய மன்னனும்
இறுதியில்
ஒரு பிடி சாம்பல் தானே..!!

புலம்பியபடியே
புதிய பிணம் நோக்கி
பார்வை செலுத்தினான்
வெட்டியான்..!!

எழுதியவர் : மனோ ரெட் (16-Mar-15, 7:40 am)
பார்வை : 321

மேலே