விழிக்க விழிக்கத்தான் விடியும்

விதைக்க விதைக்கத்தான் முளைக்கும் கவிதை
முளைக்க முளைக்கத்தான் நிலைக்கும் - புலமை
நிலைக்க நிலைக்கத்தான் வளரும் தமிழ்
வளர வளரத்தா னொளிரும்

உழுக உழுகத்தான் புரளும் மண்
புரள புரளத்தான் மலரும் - மலர்
மலர மலரத்தே னொழுகும் மனிதம்
ஒழுக ஒழுகத்தான் துளிரும்

திறக்க திறக்கத்தான் தெரியும் கண்
விழிக்க விழிக்கத்தான் விடியும் - உறக்கம்
ஒதுக்க ஒதுக்கத்தான் உயரும் வாழ்க்கை
உயர உயரத்தான் குளிரும்

நடக்க நடக்கத்தான் முடியும் எல்லை
முடிய முடியத்தான் தொடரும் - வெற்றி
தொடர தொடரத்தான் புகழும் உனைத்
தேடி வருவது நிகழும்

குடிக்க குடிக்கத்தான் ஏறும் போதை
ஏற ஏறத்தான் ஊறும் - புத்தி
ஊற ஊறத்தான் பாரும் தமிழ்ப்பால்
இன்னும் வேண்டியே கோரும்

கொடுக்க கொடுக்கத்தான் கிடைக்கும் அன்பு
கிடைக்க கிடைக்கத்தான் துடிக்கும் - மனம்
துடிக்க துடிக்கத்தான் உடைக்கும் உணர்வு
உலக வாழ்க்கையை படிக்கும்...!


----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (17-Mar-15, 12:34 pm)
பார்வை : 101

மேலே