நட்பு =காதல் =அன்பு ===தொடர் ==பகுதி 9

####################################

உலகத்தில் மிக உன்னதமானது
தியாகமாம்
உன் அன்பிற்குரிய என்னையே
தியாகம் செய்ய தயாராய் இருக்கும் போது
உன்னை விட சிறந்த தியாகி
உலகில் யாராக இருக்க முடியும்…??

######### நன்றி:மங்காத்தா (21.09.2012)
############################################

உறவுகள், நட்பு, காதல்
பகை..
எல்லாமே
புள்ளியில் பிறந்த கோடுகள் ­!!

உணர்வுகள் புள்ளிகள்.
கோடுகள் நீளமாய்,
வளைவாய் ­ வட்டமாய்.
சதுரமாய் ­ பிரமிடுகளாய்.
கோணலாய் நாற்கரமாய்,
முக்கோணமாய்…
ஆனால் புள்ளிகள் எப்போதும்
புள்ளிகளாய்!

உருவம் பல கொண்ட
கோடுகளுக்கும்
மையப்புள்ளி மாறாது!

உணர்வுகளின் மையம்
ஆன்மாதானே­?
ஆன்மாவை நான்
நம்பிக்கை என்பேன்!

நீ என்ன சொல்வாய்?
சந்தர்ப்ப மையம் என்றா…?
சதிகார மையம் என்றா…?
துரோகத் துணுக்கு என்றா…?

அன்றியும்
கோடுகளில் இதுவரை
என்னால் இருந்ததில்லை குழப்பம்!
புள்ளிக்கும்தான்.
ஆனால்
புள்ளியில் புயல் கண்டவன் நீ­
அதில் புளங்காதிதம் புகுத்தியவன் நீ!

பல ஆண்டுகளாய் நான் வரைந்த
கோடுகளில் குழப்பம்
விளைவித்தாய் ­
அந்த ரங்கோலி கோலம்
அழகானது!
அசிங்கமாக்கிய
அவல மனிதனாய் அன்று நீ!

உண்மை உதடுகளுக்குள்
ஊமையின் சங்கிலியாய்ச்
நீ அளித்த அன்பு அச்சுறுத்தல்,
பிலாக்கானம் பாடியது
உனது அவதாரம்.!

அன்றியும்,
உண்மை ஒரு நாள் உலாவரும்
விலா ஓரம் உன்
எலும்புகள் நொறுங்கும்!

பிணக்கோலம் காணும்
என்னுடன்
உன் துரோகங்கள்
மட்டுமே துணைவரும்!
அப்போதும்
என் வீட்டு ஜன்னலின்
கம்பிவலையின் ஊடே
இருவிழிகளின்
வழிநீர்ச் சொட்டுகள்
உனக்குப் பன்னீர் தெளிக்கும்
நினைவில் வை!

அநியாயம் சீறி
அவிழ்த்து விடப்பட்ட ஓநாய்களால்
கடித்துக் குதறின உதடுகளில்
நியாய திரவமே ஒழுகியது,
உன் பிரிவில்
­ இது தான் உண்மை !

ஒழுகிய திரவத்தை
மறைத்தாய் நீ
மயக்கும் வரி ஓசையால்!

எவருக்கும் நீ தரும்
கை குலுக்கல்களில்
அந்தரங்கக் கந்தகம்
அடக்கமாய் ஒளித்து வைப்பாய்,
நான் அறிவேன்!
என் கையில் சுட்டவடு
பலரின் கண்களுக்குள் இப்போது!

பாராட்டப்படும் எவரையும்
கவ்விப் பிடித்து இழுத்து
உள்ளே உன்
சுயநல வலையில் பின்னி
உருக்குலைய வைக்கும்
“ஆக்டோபஸ்” நீ
நான் அறிவேன்..!!

என் மனவெளியில்
நீ பயணம் செய்த
குதிரையின் கனைப்பில்
துரோக ஓசை மட்டுமே மிஞ்சியது!
என் ஆன்மா அலறிக்
கக்கிய குருதி நனைவில்
குதிடிரயின் குளம்புகள்!

கண்களில் பசப்பு நீரோடு
பலர் வீடுகளுக்குள்
உன் தன்னிலை விளக்கம் ஏன்?
ஒரு சிலருக்கு மட்டும்
உஷார் முன்னறிவிப்பு ஏன்?
உன் பாதகச் செயலுக்கு
பராக் போட்டவன் நீதானே!

பலரின் விடியல்களுக்கு
நான் பூபாளமாயிருந்தேன் ­
முகாரி பாடி ஒப்பாரி முழங்கிச்
சுனாமியாய் நீ வந்தாய்
விடியல் தேடும் வெளிச்சங்களுக்கு
வழி என்ன செய்வாய் நீ!

இடையில் வந்த
உன்னை நம்பினர் ­
எனது நல்லுறவு மலையை
நெம்பினர்!
பொசுங்கியது என்மீதான
நம்பிக்கை மட்டுமல்ல
அவர்களின் எதிர்காலக் கனவுகளும்தான்!
முட்களைப் பூக்கள் என
நம்பித் தங்கள் கரங்களிலும்
கழுத்திலும் சூட்டிக் கொண்ட
சில பேர் கரங்களில்
குருதி மொட்டுக்கள்!
‘கை தட்டலில்’ மறைத்தனர்
ரத்த சொட்டுக்களை!

ஒரு நந்தவனம்
சாம்பல் சமாதிக்குள் இறங்குவது
அறியாது,
மலர்ச் செடிகள் பயணிக்கின்றன!

இன்னும் ஒரு தொடரில் மட்டும் தேடுவோம்...

எழுதியவர் : அகன் (17-Mar-15, 5:15 pm)
சேர்த்தது : agan
பார்வை : 183

மேலே