மழலை சுகம்
கைத்தூக்கிக் காலுதைத்து
விரல் சூப்பி மயக்கும்
உன் மை பூசிய கண்ணசைவில்
மண்மயங்க்குது காண்
பிடித்திழுத்துக் கசக்கிக்
கிழித்துவகை பெறும் உன்
துடிக்கும் கரங்களுக்காய்
நிலையடுக்கில் என் நூல்கள் தவம்
புதிய தோழன் நீ எனக்கு
வீரிய பூபாளம் நீ -மானுட
நதியோட்டத்தின் கரை தளும்பும்
நேச நீரலை நீ
அழுகிறாய் சிரித்து மருள்கிறாய்
மீண்டும் அழுகிறாய் .
பழுதில்லை என்கிறார் மருத்துவர்
பதற்றம் படர்கிறது என்னுளே
ஒரு நேரம் விட்டத்தினுள் பார்வை
மறு நேரம் எதிரில்
அருகில் நான்
காண மறுக்கிறாய் .. .கலங்குகிறேன்