நண்பனைப் பார்க்கச் செல்லுதல்
உடம்பு சுகமில்லாமல்
மருத்துவ மனையில்
அனுமதிக்கப் பட்டிருந்தான்
நண்பன் !
வரவேற்ற
அவன் தாயின்
முகத்தில்
வறண்ட புன்னகை !
" வா இவனே "
என்றழைத்த
நண்பனின்
குரலில் மட்டும்
பழைய உற்சாகம் !
பேசிக்கொண்டிருந்தோம் ......
பேச்சுக்கு நடுவே
ஆங்காங்கே
பெருமூச்சுக்களைத்
தொட்டுக்கொண்டு !
அவனது
மருத்துவச் செலவு
எனும்
நெடும் பயணத்திற்கு
ஆறுதல்நிழல் மட்டுமே
என்னிடம் !
சற்றுநேரத்தில்
அந்த இடத்தின்
டெட்டால் வாசனைக்குப்
பழகி விட்டிருந்தது
நாசி !
நடுவே
நர்ஸ் ஒருத்தி
அவனது
இரத்தக் கொதிப்பு
சோதித்துப் போனாள் !
சூழலின்
இறுக்கம் தளர்த்த
கடைசியாகப் பார்த்த
திரைப்படத்தின்
பெயர் கேட்டான்
நண்பன் !
அரைக்கிலோ
மாதுளம் பழமாவது
வாங்காமல்
வந்து விட்ட
எனது வெறுங்கையை
நான்
நொந்து கொண்டிருந்தபோது .......
எங்கோ
வெளியில் போய்விட்டு வந்த
நண்பனின்
தாயின் கைகளில்
தேநீரும்
இரண்டு வருக்கிகளும்
இருந்தன !