உனது காதோரத்தின் சுருண்ட முடி
அழகில்
நிறைகுடம் தான்
நீ .......
ஆனாலும்
தளும்புகிறாய் !
=================
சாவி கொடுத்தால்
ஓடும்
பொம்மை போல
எனது
பார்வை கொடுத்தால்
புன்னகைக்கும்
அழகான பொம்மை
நீ !
=================
அலுவலக
நாற்காலியில்
சற்றுப் பெரிய
பூங்கொத்து
ஒன்றை
வைத்திருந்தார்கள் ......
உற்றுப்பார்த்தால்,
அட,
அது
நீ தான் !
=================
உனது
எச்சில் பட்ட
உப்புமாவும்
எனக்கு
இருட்டுக்கடை
அல்வாவாகும் !
=================
ஒரு
வண்ணக் கோலம்
நடந்து வராது ..........
ஒரு
குத்து விளக்கு
நடந்து வராது .........
ஒரு
பழத்தோட்டம்
நடந்து வராது .......
என்றே
நம்பிக் கொண்டிருந்தேன்,
நீ
நடந்து வரும்வரை !
=================
உனது
வறட்டு இருமலிலும்
எனக்கு
வயலின் வாசிக்கிறார்
இளையராஜா !
=================
நீ
உம்மென்று
இருந்தால்,
அழகு
சொட்டுகிறது !
புன்னகைத்தால்,
அழகு
பெய்கிறது !
=================
உனது
துப்பட்டா
எனக்கு
இன்னொரு
தேசியக்கொடி !
=================
உனது
ஆடைகளின்
அழகு சாதனப்பொருள்
நீ !
=================
உன்னைச்
சாப்பிட்டுப் பழகிய
எனது கண்களுக்கு
பால் நிலாவும்
பழைய சோறுதான் !
=================
உணவின்
ஏழாவது சுவை
சூடு !
எட்டாவது சுவை
உன்னால்
சமைக்கப்படுதல் !
=================
நீ
ஏறிக்கொண்டால்
கடிவாளம்
இல்லாமலேயே
பயணிக்கின்றன
எனது
கனவுகள் !
=================
உனது
உதட்டிலேயே
ஒட்டிக்கொண்டிருந்தது
ஒரு
சாக்லேட் துணுக்கு ....
விட்டுப் போக
மனமில்லாமல் !
=================
உனது
பெயரும்
முகவரியும் மட்டும்
இருக்கின்றன .....
தேவதைகளின்
இரத்த வங்கியில் !
=================
மஞ்சள் பூசி
நீ
குளித்தால்
மஞ்சளுக்கு
மஞ்சள் நீராட்டு விழா !
=================
எல். கே. ஜி குழந்தைகள்
உனக்கு
வைத்த பெயர்
பிக் பட்டர்ப்ளை !
=================
நிலவைக் காட்டி
சோறு ஊட்டப்பட்ட
ஒரு குழந்தை
சமர்த்தாகச்
சாப்பிட்டு முடித்தது .....
மொட்டை மாடியிலிருந்த
உன்னைப் பார்த்தபடி !
=================
தேநீருக்கு
தேநீர் என்ற பெயர்
சற்று அதிகமோ
என்று
நினைத்திருந்தேன் !
நீ
போட்டுக் கொடுத்தாய் ......
தேநீருக்கு
தேநீர் என்ற பெயர்
சற்றுக் குறைவோ
என்று
நினைக்கத் தொடங்கிவிட்டேன் !
=================
உனது
காதோரத்தின்
சுருண்ட முடியை
உலகின்
மிக அழகான
எதனுடனாவது
ஒப்பிட முயன்று
முடியாமல் ........
" உனது
காதோரத்தின்
சுருண்ட முடி போல
இருக்கிறது
உனது
காதோரத்தின்
சுருண்ட முடி "
என்று
எழுதி வைத்தேன் !