சோத்துக்கு பொறந்த பொறப்பா - இராஜ்குமார்

சோத்துக்கு பொறந்த பொறப்பா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புள்ளத்தாச்சி புள்ளைக்கி
பொடவ வாங்க வக்கில்ல ...
நாத்தக் கூட நடாதவனுக்கு
கெணத்துக்குள்ளையா காசு மொளைக்கும் ..??
ஆத்தா அதட்டியும்
பழையநூலு கட்டுலுல படுத்தவன்
எந்திரிக்கல ...பொழுதினிக்கும்..
எட்டு மூட்டபூச்சி ...அவன்
காலு கைய கடிச்சும் முழிக்கல ..
பொம்பள குளிக்க
பொடக்காலி கூட இல்லடா ..
நாலு தடுக்கப் பின்ன
பச்ச மட்டைக்கா பஞ்சம் ...??
அப்பெங் கொரலுக்கும்
ஆகாவல்லி அசரவே இல்ல..
அடத்து மேல போட்ட வெறவா
அவன் ஒடம்பு அம்பூட்டு அழுக்கு..
ஆம்பள தூங்கித் தூங்கி
அடுப்புக்கரி அழுகிப் போச்சி
வாசத் தெளிக்கிற
ஒத்தச் சட்டியும் ஒடஞ்சி போச்சி ..
வெந்த மனச மறைச்சி வச்சி
பொலம்பிக் கெடக்கா
இவம் பொறப்ப நெனச்சி ..
வூடு பூரா ஓட்டட அடிச்சி
ஊதாங் கொழப்பில ஊதி ஊதி
ஒரு வா சோத்த வடிச்சவ ...
வயித்த புடிச்சிகிட்டே ...அவ
புருசன மெதுவா எழுப்புனா ..
"இந்தா... மனுசா .... ரெண்டு
சோத்தத் தின்னுட்டு படுத்துக்க.....!!!
- இராஜ்குமார்