சிட்டுக்குருவிகளின் ரகசியமும் வீடு திரும்பலும்

திரும்பி வந்தன
சிட்டுக்குருவிகள்
மேய்ந்தலைந்து
பறந்து களைத்து
கூடவே
நிறைய அனுபவங்களைக்
கொத்தியும் கோதியும்

கூடு விசாலமாய் ,
போனது வராது
வரவும் முடியாது என்றில்லை.
அன்றியும்
ஒருமுறை கூட்டில் கரைந்தப்பின்
வெளி வந்து பறந்தால்
குருவியென ஏற்றிட கொண்டாடிட
இல்லை தயாராய்
குருவிகள்.

பறக்கும் போதுதான்
பல நெளிவுகள் ,அசைவுகள்

என்றாலும் எல்லா குருவிகளும்
பறக்கின்றன
கூட்டில் கரையும் வரை.

முழுமையாய் பறப்பது சில

குறையாய் சில

விடுவிடு என சில

வி ட் டு வி ட் டு சில

எப்போதும் சில
யே
லே
மே

கீ
ழே
யே
சில

என்றாலும் எல்லா குருவிகளும்
பறக்கின்றன -புழுதி கொண்டும்
புழுக்கம் ஏற்றும்
அழுக்குப் பார்த்தும்
அசிங்கம் அமைந்தும் ......

.........அண்ணன் கூறினார்,
"லே,
அய்யன் வீடு திரும்பிட்டார்லே..."
தெருவில் நான்-
வீடு திரும்பிய அய்யனுக்காக
காத்திருக்கிறேன்.

"லே, காசு பொருக்காதேலே
அய்யன் தருமம் அது-
வீடு திரும்புவதற்கு"

வீடு திரும்பினால்
காசு இறைக்க வேண்டுமா?
எங்கும் எப்போதும்
சிதறிய காசுகள்
அப்பாத்தா,மதனி,அயித்தான்,
அத்தை .......
எல்லோரும் வீடு திரும்பினார்கள்
இப்படித்தான்.
ஆனால்
ஏகாலி வீட்டு கிழவி
வீடு திரும்பியப்போது
காசு இறைக்கவில்லையே
யோசித்தேன்.

"லே,
ஒங்க அய்யன் காசு,பணம்,
காடு,வரப்பு......
ஒங்க ரெண்டு பேருக்கும்தாம்லே.."
பஞசாயத்து பாகப்பிரிவினை !

இப்போது
என் சட்டைக்குள்ளும் காசுகள்.
நான் வீடு திரும்பிட
இறைக்கவேண்டுமே .

சிட்டுக்குருவிகள்
இன்னமும் பறக்கின்றன
அவைகளும் ஒரு நாள்
வீடு திரும்பும்(கூட்டில் கரையும்)
ஆனாலும்
அவைகளிடம் இருப்பதில்லை
தானிய மணிகள்
இறைத்திட -
அவைகள்
வீடு திரும்பும் போது!!!!.

எழுதியவர் : அகன் (20-Mar-15, 8:10 am)
சேர்த்தது : agan
பார்வை : 65

மேலே