வனம் வரைந்த கதவுகள் - இராஜ்குமார்

வனம் வரைந்த கதவுகள்
~~~~~~~~~~~~~~~~~~~~

பரிதியைப் பலியிட்ட பகலொன்றில்

விழிக்குள் முளைத்த ஒளியோடு
எம்முகம் செதுக்கியப் பாதையில் ..
எல்லையைத் தாமிரத்தால் தாழிட்ட
கருநிற கதவைத் திறந்ததும் ...
வறண்ட வனமொன்று நீண்டது ..

ஆழத்தில் அழுகிய வேர்களென
விதைக்கான வரலாறு உதிர்ந்தது..
தாகத்தில் பருகிய துளிகளென
சுனைக்கான சுவடுகள் தீர்ந்தன ...

வெளியின் விரலாய் அதிர்ந்துதிரும்
வெண்ணருவி மடிப்பில் மயங்கி
மந்திர அழகென உணர்கையில்
எனை மர்மமாய் மிரட்டியது ..நீர் ...

உயிர்ப்பிடித்து உச்சத்தில் ஓடியவனின்
உயிர்ப்பறிக்க துரத்தின
உருண்டு திரண்ட திவளைகள் ..

திவளைகளின் தேகம் ..தீடீரென
தாடி முறுக்கி தாவும் முகமேந்தி
மடிந்த மழலையாய் உருமாறி
பல்லுடல் பிணைத்து விரட்டின ..

கொடூரப் பற்கள் கழுத்தினைக் கடிக்க
யாவும் அழிந்தன என்னுள் ..

மீண்டும் விழிக்கையில் ... மிரண்டேன் ..
முரணான காட்சிக் கண்டு

என்னுடல் தரையில் புதைய
அருவி உச்சியில் ஆர்ப்பரித்து
அலறியது என்னுயிர் ....ஓயாமல் ..
அருவியின் ஆழத்தில் தெறித்தன
எரிமலைக் கக்கிய தீப்பிழம்புகள்

உச்சியில் அலறிய என்னுயிரை
தலைகீழாய் ...உறுஞ்சியிழுத்தது
எரிமலைக்குள் ஊறுமிய உருவம்..

ஆழக்குழம்பிய குற்றங்களால்
அச்சுறுத்தும் அதிர்வினில் மூழ்கி
ரகசிய ரணங்களால் ..நான்
மரணித்த மறுநிமிடம் ..

வெண்ணிற கதவினைத் திறந்து
ரோமமில்லா எழில் உடலோடு
ஒரு மழலை ....கவியாய் நுழைய
பசுமைப் படர்ந்து ...வனம் வானமானது ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-Mar-15, 3:20 pm)
பார்வை : 1138

மேலே