பூக்கள் என்பது - 2
திருவிழாவில்
தேர் இழுக்கிறார்களாமே...
இல்லையே
தேர் தானே என்னை இழுக்கிறது..!
@ @ @
அமுதென்பது...
உன்
ஐ விரல் கடைவது...!
@ @ @
அதென்ன...
உனக்குச் சீட்டெடுக்கும்
கிளி மட்டும்
எப்போதும்
மீனாட்சியையே எடுக்கிறதே...!
@ @ @
கோடை காலப் பேருந்தும்
குளு குளு மகிழுந்தானதே...
எதிர் இருக்கையில் இருக்கிறாய் நீ..!
@ @ @
பேப்பரும் பேனாவுமாக
ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாய்...
என்ன செய்கிறாய் என்றேன்..
அழகுக் குறிப்பெடுக்கிறேன் என்கிறாய் ..
ஓ...
அழகு...
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது என்றேன்..!
@ @ @
தலை சாய்த்து
அப்படியென்ன பார்வை...
தூண்டில் முள்ளாட்டம் என்கிறாய்...
கருப்பு நதியில்
மிதக்கும் பவளப் பாறையில்
வழுக்கி விளையாடும்
கயல்கள் இரண்டை வைத்துக் கொண்டு...!
@ @ @
நீ வரும் வரை
மொட்டின் மேல்
இதழ்களெனத் தானே இருந்தன
இமைகள்..
பூக்களை எப்படி பட்டாம் பூச்சி ஆக்கினாய்..!