மனசாட்சி
சுயநலத் தேர்ச்சக்கரத்தில்
மனசாட்சியை
நசுக்கிக் கொன்ற
நாட்களினனைத்து ராக்களிலும்
மனப்பசு
ஆராய்ச்சி மணியடிக்க
கடந்திட்ட தேர்க்கால்களின்
கீழ் -
எதைக்கிடத்தி மேலேற்றி
எத்தனை தான்
பழிதீர்த்து
எப்படி பாவம் போக்க ?
கோலோச்சியிருந்த
குடையுடை சிம்மாசனம்
பாவத்தின்
உடைசிலம்புப் பரல்களால்
சாய்ந்து
குப்புற விழ
" யானோ அரசன்
யானே கள்வன் " - எனும்
மனசாட்சியின்
குரல்வளை நெரித்து
ருத்ராட்சப் பூனையாய்
பாவங்களைத் தாண்டி
பதுங்கிப் பதுங்கி
சுகமீனின்
ருசி சுவைத்து
யோக்கியனென்று
மதில்மேல் மண்டியிட்டு
மறுநாள்
மனசாட்சி கொல்லும்
அன்றாடச் சித்ரகுப்தக்
கணக்குகளை
என் செய்து நேர் செய்ய ?
பாவம் வழிந்தோடும்
பாத்திரத்தைக் கையிலேந்தி
வந்தமர்ந்த புறாவிற்கு
மாற்றான் சதை வெட்டி
நியாயத் தராசிலிட்டு
தான் தப்பித்து
மனசாட்சியைக் கொன்று கொன்று
காலம் நகர்கிற
மயானங்களின் பாதையில்
'' நேற்றைய சித்தார்த்தன்
இன்றைய புத்தனாகி
இன்றைய புத்தன்
நாளைய சித்தார்த்தனாகிற
காலச் சக்கரத்தின்
எந்த ஆரம்
என் ஆரம் ?