மீண்டும் தாயாக நான்
நாட்கள் தள்ளி
போனது எனக்கு
வழக்கம் போல
வந்து விடும்
என்ற நினைப்பில்
விட்டுவிட்டேன்
மெல்ல படபடப்பு
ஒட்டி கொண்டது
எனக்குள் இன்னும்
வரவில்லை என்றதும்
கொஞ்சம் அசதியும்
வந்து ஒட்டிக்கொண்டது
குழப்பத்தோடு சேர்ந்து
ஒருவேளை அதுவாக
இருக்குமோ என்றது
என் மனசு
கவனமாக தானே
இருக்கிறோம் என்றது
அவர் அறிவு
இன்னும் அது
வரவில்லை என்று
சொன்ன போது
வரும் வரும் என்று
அசட்டையாக சொன்னவரின்
பொறுமையும் போனபின்பு
வாங்கி வந்தார் அதை
சோதனை முடிவு
சொன்னது + குறி
அது சொன்னது
ஒன்றான நான்
இரண்டாகி இன்னொரு
உயிரை தாங்குவதை
புது தாயாக நான்
புன்னகை பூத்தேன்
ஏற்கனவே தாயான
நான் அச்ச்சபட்டேன்
கையில் அணைத்திருந்த
அந்த குழந்தையையும்
இந்த புதுபூவையும்
எப்படி பத்திரமாக
பார்க்க போகிறேன் என்று
நினைவை நிஜமாக்கியபடி
வயிற்றில் மிதித்தபடி
என்ன பாக்கிற
என்று மழலை
கொஞ்ச கேட்கிறது
எப்படி சொல்ல
என்று தெரியாவிட்டாலும்
புது பாப்பா வரும் என்று
சொல்லி வைத்தேன்
பாப்பா இங்கிருக்கு
என்று அதையே
காட்டி சிரித்தது
இது வேற பாப்பா
என நான் சொல்ல
வேற பாப்பா வேண்டாம்
என்று சொன்னது மழலை
அவன் அப்பாவை போல
தந்தையாக அவரேனோ
மகிழவில்லை மாறாக
கொஞ்சம் கடுகடுவென்று
முதலில் கருவுற்றது
தெரிய வந்தபோது
என் விரல்பிடித்து
புன்னகை பூத்த
அவரேனோ இப்போது
அனுசரணை இன்றி
முதல் குழந்தைக்கு
அப்படியாம்மா என்று
பூரித்த மாமியாரும்
அம்மாவும் இப்போது
அப்படியா என்பதுபோல
கேட்டது வலித்தது
சேதி சொன்னதும்
கண்ணை மூடும்முன்
இளையதையும் பாத்துடலாம்
என்று சிரித்தமுகத்தோடு
சொன்ன மாமனார்
கடவுளாக தெரிந்தார்
ம் ம் ம்
இன்னும் அதிகமாகவே
பூரித்து போயிருப்பேன்
நானும்
முத்தத்தை பதித்திருப்பான்
அவனும்
கொண்டாடி இருப்பார்கள்
சொந்தங்களும்
முதலாவதாக இருந்திருந்தால்
ஏனோ இது
இரண்டாவதாகி போனதால்
இறுக்கத்தில் எல்லோரும்
யாரென்ன சொன்னாலென்ன
சொல்லாவிட்டால் தானென்ன
நான் மட்டும் சொல்லிவிட்டேன்
குட்டிபூ மேல் மெல்ல
விரல் பதித்து
குட்டிமா உன் வரவில்
எனக்கு மகிழ்ச்சி மட்டுமே
முதல் குழந்தை
மகன் ஆனதால்
இரட்டைச்சடை கட்டி
பூவைத்து அழகுபார்க்கும்
ஆசையோடு காத்திருக்கிறேன்
ஏமாற்றாமல் நீயும்
அப்படியே வாவென்றேன்
புரிந்தோ புரியாமலோ
உணர்ந்தோ உணராமலோ
அசைந்த சிசுவின் துடிப்பு
என் விரலை முத்தமிட்டு சொன்னது
ம் என்றோ அ ..ம்மா என்றோ!