ஊமை வாசக உச்சரிப்பு - இராஜ்குமார்

ஊமை வாசக உச்சரிப்பு
~~~~~~~~~~~~~~~~~~~
வான்நோக்கிப் பாயும் ஒளிமூலத்தில்
ஒற்றையாய் ஒழுகிய ஒரு கற்றையை
பூமி புழுதிக்குள் வீழாமல் பிடித்து
இருண்ட வீதிக்கு ஒருபாதிக் கொடுக்க
வீதியெங்கும் ஒளிர்கிறது உன்முகம் ..
உன் கால் நகம் கீறிய
என் தேசத்து வாசலில் ..சுரக்கும்
வாசனை ஊற்றுகளில்
வீறிட்டுப் பிறக்கும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
மூலைக்கு மூலை ..உன் பெயராய்
முளைத்து விழுகிறது ....சாரலாகவும் .
வருடத்தில் ஒருமுறை நிகழும்
உன் வருகைக்கு முன்னதாய்...
என்னுள் மிதக்கும் சன்னலுக்கு
வலதுப்பக்கத்தில் மெதுவாய் உதிரும்
மஞ்சள் நிறப் பூக்களும்
நரைத்துப் போன என் நினைவுகளால்
வெளிர்நிறத்தில் வேரூன்றி நிற்கிறது ...
மென்பொருள் விழுங்கிய மேனிக்குள்
வளைந்துக் கிழிந்த செவி சவ்வினில்
ஓயாமல் நுழையும் ஒலியலையென
பிறழாமல் பதியும் உன் குரல்....
பிரபஞ்சத்தின் பிரதிப் பிம்பமாய்
அந்தரத்தில் தலைகீழாய் அசையும்
ஊதாநிற ஊஞ்சலொன்றில் ...அமர்ந்து
ஊமை வாசகத்தை உச்சரிக்கிறது..
- இராஜ்குமார்