கோட்டோவிய மழலைகள் -20
மெல்லடித் திங்கள் தவழத்
தேய்கின்ற
பிறைத் தடங்களில்
மதுரமாய் உதிரும்
மணிப்பூக்களின் ஆரோகணம்
பால்முக மனைவலம் ….
கண்மணிக்குள் (கண்ணின் கருமணி)
தாரகைத் துணுக்குகள்
மந்தகாசப் பூவாய்
மின்னூட்ட
கற்கண்டு முத்தங்கள்
ஆலங்கட்டி பொழியக் கொஞ்சும்
உன்மத்தம் …
மழலைமொழி
குங்குமப்பூத் துருவல்கள்
வெற்றிடம் சிவக்கும்
யாரோடு மிழற்றுமோ
தாய்மொழி தத்தும் பேரின்பம் ….
வா , போ
என்பதெல்லாம்
மனமொன்றிக் கிறங்க
வயது கொண்டாடும்
உரிமைக் கனவுகளின்
மந்திரப் புளங்காகிதம் ….
பட்டுத் தழுவலில்
தாய்மணம் சுரக்கப்
பொம்மைகள் வளர்க்கும்
பிஞ்சுத் தாலாட்டு ….
பளிங்குக் குறும்புகள்
உச்சி முகரப் ,
பிச்சிப்பூ மடல்களாய்
அரிசிப் பற்களின்
முத்துநகைக் கொலு ….
எட்டித் தருகின்றதில்
தேன்குழல் தீர்த்தமூறும்
எச்சில்ப் பண்டங்கள் ,
மொட்டு இதழ்களின்
கெஞ்சு முத்தங்கள் குஞ்சாலாடு ...
பிரபஞ்ச விரல் பிடிக்கும்
நாளைகளின் வளர்தளிர்
வரமாகும் வசந்தங்களின்
சிங்காரச் சிணுங்கல்
வலிகளைக் கற்பனையாக்கும்
பெர்முடா முக்கோணம் ….
அனுபவங்களின் எதிர்காலத்
திறவுகோல்
அழகெல்லாம் படிக்கும்
புனிதநூல் ...
ஓவியத்துள் தித்திக்கும்
துருதுரு வண்ணம் மழலை !