மனித வெடிகுண்டு
கணவனைப் பலிகொண்ட
கார்விபத்தில் கருவோடு
கர்ப்பிணி நான் சாகவில்லை
கழிவறை வழுக்கலில்
கால் இடறி விழுந்தபோது
கருக்கலைந்து போகவில்லை
கொடிசுற்றி தலைமாறி
பிரசவம் பிழையாகி
பிறக்குமுன் மடியவில்லை
பசியால் அழுதபோது
பால் கொடுத்த மார்பகங்கள்
கள்ளிப்பால் சுரக்கவில்லை
ஒரு பிள்ளை பெற்று
ஒரு நூறு பலிகொண்டேன்
மனித வெடிகுண்டாய்
மடிந்தாய் மகனே உன்
மரணம் மிகத் தாமதமே