குடியிருப்பு பூங்கா என் தாத்தாவிற்கானதல்ல

"மூன்று நாட்களாய் உடல் நலம் இல்லை
சுவாச கோளாறு போல் தெரிகிறது"
புலம்பினார் என் தாத்தா

"மருத்துவரிடம் சென்றால் என்ன"
கேட்டதோடு நில்லாமல்
உடன் அழைத்து சென்றேன் அவரை

இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து
இறுதியாய் மருத்துவர் முன் நாங்கள் சென்று அமர
என்னை நன்கு அறிந்தவர் சற்றே நலம் விசாரித்தார் என்னிடம்

சில பரிசோதனைகள் செய்துவிட்டு
கவலை பட ஒன்றும் இல்லை
மாசு படிந்த காற்றை சுவாசிப்பதனால் வரும் பிரச்சனை தான்
பூங்கா சென்று தினமும் உடற்பயிற்சி செய்தால் போதும்
சுருக்கமாய் சொன்னார் அவர் வழக்கமாய் சொல்லும் வசனத்தை

வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியெல்லாம்
அமைதியாக இருந்தார் என் தாத்தா

என் அடுக்கு மாடி குடி இருப்பில்
அழகிய பூங்கா இருக்கவே இருக்கிறது
தினமும் அங்கு சென்று சில மணி நேரம் நடந்தால் போதும்
உங்கள் உடம்பு சரி ஆகி விடும்
ஆறுதலாய் சொன்னேன் நான்...

மறுநாள் காலை எல்லாம்
கையில் பையோடு தயாராய் இருந்தார் அவர்

பூங்கா செல்ல பை எதற்கு?
ஆச்சரியமாய் பார்த்த என்னிடம்
"உன்னை பார்க்க தான் வந்தேன் நான்.
பார்த்தாகிவிட்டது.. சில நாட்கள் தங்கியாகிவிட்டது
நம் ஊருக்கு சென்று வாய்க்கால் வரப்பில் சுற்றி திரிந்தால்
இரண்டே நாட்களில் உடல் நலம் ஆகிவிடும்"
சொல்லிவிட்டு மெல்லிய புன்னகையோடு விடை பெற்று சென்றார்

அவரை வழி அனுப்பிய எனக்கு
என் குடியிருப்பில் இருந்த பூங்கா
வெறும் பார்வைக்கு தான் என நன்கு புரிந்தது....!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (27-Mar-15, 12:10 am)
பார்வை : 56

மேலே