சுடுகாட்டுச் சாம்பல் =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

முதல்முறையென்
அகவை பத்தொன்பதில்
அக்கலசத்தை பெறுகையில்
உயிரை வேரோடு உருவி
வெளியே வீசியது போலொரு
உள்ளார்ந்த வலி உடலெங்கும் ...
என் தகப்பனின்
சுடுகாட்டுச் சாம்பல் கலசத்தை ...
ஏந்திய பொழுதது ...
என்
அம்மாச்சி
தாய்மாமனென
மறுமுறையும் நிகழ்ந்தது அது
என் நாற்பதகவைக்குள்...
என் கலசத்தை
ஏந்த என் மகன்
எழக்கூடும்....நாளை
நேற்று கடந்தன
இன்று நடந்தன
நாளை வருவன
எல்லாவற்றின் மூலமாய்
ஒளிர்கிறான் ஒருவன் ...
ஆனாலும்
தான் ...தானென்று
தறிகெட்டாடுகிறான்
மட மனிதன் ...
ஏதோவொரு நெருங்கிய
உறவின் ...நட்பின் ...
இறுதி சடங்கினில்
இடுகாடு சென்றுவிட்டு
புதியதாய் கலசமேந்தும்
ஒருவனைக் காண்கையில்
அந்தச் சுடுகாட்டுச் சாம்பல்
ஏளனமாய் எனைப்பார்த்து
சிரிக்கும் நொடியில்
திகைத்து நான் திரும்ப
ஆழ்மனதை கிழித்து
அர்த்தம் சொல்லிச் சென்றது
அச்சுடுகாட்டுச் சுவற்றின் மொழி
" இன்று நான்
நாளை நீ ..!
---------------------------------------------------------------------
=0= குமரேசன் கிருஷ்ணன் =0=