கரை சேரா வல்லினம்
இன்று மில்லில் இரண்டாவது ஷிஃப்ட் என்பதால்,வீடு கிளம்ப மணி 10 ஆகியிருந்தது.என்றும் இல்லாததாய் காற்று இன்று பலமாய் வீசத்தொடங்கியதைக் கண்டு,வேகமாய்
நடையைத் தொடர்ந்தேன்.தெருவிளக்கின் வெளுச்சத்தில்,காய்ந்த சரகுகள் காற்றின் இசைக்கேற்ப தன் மரணத்திற்கான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தன.
அந்த ஆட்டமானது,இன்னும் சற்று நேரத்தில் மழை வரப்போவதை காற்றிடம் சொல்லிக் கொண்டிருந்தன. இயற்க்கையின் ஆட்டம் பொய்யாகிவிடுமா என்ன??
ஆம்..ஒழுங்காய் பின்னாத ஒலைக்குடிசைக்குள் ஒழுகும் நீரைப்போல் தொடங்கி,இப்போது நன்றாகவே பிடித்துவிட்டது மழை......என் மனதிலும் கூடத்தான்.
அங்கிருந்த பெரிய ஆலமரமானது,மழைத்துளிகளை தனக்குள் அங்குமிங்குமாய் உள்வாங்கி,இன்பத்தில் மயங்கத்தொடங்கியிருந்தது.ஏனோ ஓய்வில்லா இந்த மனிதத்தேடலில்
அங்கே சற்று நேரம் நிர்கவேண்டும் போலத் தோன்றியது.
என்ன ஆச்சர்யம் இது!..இந்த வேளையில் அதே மரத்தின் அடியில்,சுருட்டை முடியும்,அழுக்குக் கந்தலுமாய்..வெள்ளை நிற்ம் என்று சொல்லமுடியாத ஒரு விதமான பழுப்பு நிறமாய்..சிறுவன் ஒருவன் நிற்கின்றான்.எப்படியாவது அவனிடம் பேசிவிட வேண்டுமென்று தோன்றியது.
ம்ஹூம்....என்ன பேசுவது? எதையாவதை கேள்வியைக் கேட்பதுதான் எளிது..''உன் பேர் என்னப்ப?''-எப்படியோ கேள்வியைத் தொடங்கிவிட்டதில் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி....
''அந்த அடையாளம் எனக்கே தேவையில்லாத போது,அது உனக்கும் உதவபோவதில்லை'' என்று எங்கேயோ பார்த்தபடி சொன்னான்.
அதிர்ந்து போனேன்! என்னைக் கண்டு அஞ்சுகிறான் போலும்!!
''இந்த ஊரா?இல்ல வெளியூறா?'' என்று கேட்கப்போய்..என்னை நானே ''முட்டாள்! அதுவும் கூட ஒரு அடையாளம் தான்!-என்று சொல்லி சுதாரித்துக் கொண்டேன்.
அவனான அடையாளத்தை தவிர்த்து,ஒரு கேள்வியாவது கேட்டுவிடவேண்டும்.தன்மானத்தை தவம் கிடந்து பெற்ற இனம்மல்லவா இந்த விலங்கினம்!
"நல்ல மழப் பேயுதுல?மக்கள் எல்லாம் நிம்மதியா,சந்தோசமா இருப்பாங்க..சரிதான?'' என்று ஒரு வழியாய் கேட்டுவிட்டதில் பெருமிதம்தான் எனக்கு.
"இந்த நிம்மதியில் அடுத்த கவலையை எண்ணத் தொடங்கியிருப்பார்கள்...அவர்கள்!''
ச்சீ..யாரிவன்?ஏன் இப்படி பேசுகிறான்...ஒன்றும் புரியாதவனாய் யோசித்தேன்..ஓ..மனிதர்கள் மீது கோபம் போலும்!பாவம்..அவனான மனிதக் கர்பிதங்கள் என்னவோ?
''நமது கற்பனைக்குள்ளோ,வாழ்க்கை தந்த கற்பிதங்களுக்குள்ளோ,நான் யாரையும் பொருத்திப் பார்ப்பதில்லை!'' என்று சொல்லியவன் முகத்தில் எந்த பாவனையும் இல்லை.
இம்முறை என் நாசித்துருவங்கள் மூச்சுக்காற்றை சூடாய் வெளியேற்றி என்னை பயப்பட வைத்துவிட்டது.காரணம்..இம்முறை நான் நினைத்தது மனதில்தான்.எப்படிக் கண்டுக்கொண்டான்?அந்த பயமானது என்னை அறியாமலே என் பகுத்தறிவை பதம்பார்த்து விட்டுப் போயிருந்ததால்,தலையை மட்டும் மெதுவாய் கீழிறக்கி அச்சிறுவனின் கால்களை பார்த்தேன்.
ஹு...நாம் நினைத்ததைப் போல பயப்படத்தேவையில்லை.
மழை சற்றும் குறையாத வண்ணமாய் ரோடுகளை ஓடைகளாய் மாற்றியிருந்தது.
இவனை சற்றும் கண்டுகொள்ளதவனாய்,மனதை வேறு எண்ணத்தில் அலைப்பாயவிட்டேன்.
ம்ஹும்...முடியவில்லை..யார் இவன்?எதற்காக இவன் இப்படி பேசுகிறான்?இவனான மர்மம் என்ன?ஏன் இவனான மர்மம் இப்படி என்னைத் தொந்தரவு செய்கிறது?
'தி டெல் டேல் ஹார்ட்' கதையில் வரும் அந்த மரணித்த கிழவனின் உயிர்த்துடிப்பைப் போல் அல்லவா..இவன் மீதனான மர்மம் என்னைத் தொந்தரவு செய்கிறது.
இப்போதுக் கூட நான் எண்ணியதை அவன் அறிந்திருப்பானோ?என்று அவன் முகத்தைப் பார்தேன்.
எதுவும் பேசாதவனாய்..இலைகளை சற்றும் மூச்சுவிடாதபடியாய்..மழைத் துளிகள் ஒன்றின் மீது ஒன்றாய் அழுத்திக்கொண்டிருந்தன.
யாரிவன்..எவனாக இருந்தால் நமக்கென்ன?என் கவனத்தை திசைத் திருப்பும்ப் பொருட்டு, என் கண்களை சில டிக்ரீ உரிட்டி அருகில் உள்ள கோயிலின் மீது
பதித்தேன்.என் பயம் கூட அதன் காரணமாக இருக்கலாம்.
"ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே"
பாடல்திசை நோக்கி பார்த்தேன்.சரிதான்.அதே சிறுவன் தான் பாடிக்கொண்டிருந்தான்.
ஓ!! உனக்கு சித்தன் பாட்டெல்லாம் தெரியுமா? என்று கேட்டேவிட்டேன்.
எதை நாம் துறக்க நினைக்கிறோமோ,அதுவே நம்மை முழுதும் ஆட்க்கொண்டுவிடுகிறதும் போலும்!மனித இனத்தின் சாபம் போலும்!
பேசக்கூடாது என்றெண்ணியவன் பேசிவிட்டேனே..நல்ல வேளையாய் அதற்கும் எதுவும் பேசாதவனாய் மௌனித்திருந்தான்.
மழை சற்றே குறையத் தொடங்கியிருந்தது.
"வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்கிறேன்"-இம்முறை என்னை நான் ஆத்மாத்தப்படுத்திக் கொள்ள,அவன் கேட்கும் படியாக சத்தமாய் சொல்லிவிட்டேன்.
"இவ்வளவு நேரமும் நாம் வீடு செல்ல மழைத் தடையாக இல்லை.நாம் தாம்!!" என்ற சிறுவனின் முகத்தில் மெல்லிய புன்னகை..முதன்முறையாக.
அதுவும் சரிதான்.வேகமாய் நடையைக் கட்டியிருந்தால் 10 நிமிடதிற்குள் சென்றுவிடும் தூரம் தான் என் வீடு இருக்கிறது.எதுவும் பேசாதவனாய்,அந்த இடத்தை விட்டு கிளம்பத் தொடங்கினேன்.என்னவோ..மழை சிறிது சிறிதாய் குறைவடு போல,இவன் மீதான விசித்திரமும்,எண்ணமும் குறையத் தொடங்கியிருந்தது.மணி 12 க்கும் மேல் ஆகிவிட்டதை உணர்ந்து வேகமாய் நடையை தொடரும் முன்,என் வலதுகை விரல்களை இருக்கமாய்ப் பிடித்துக்கொண்டான்.
உங்களுக்கு தெரியப் போவதில்லை.எவ்வளவு மெல்லிய விரல்கள் தெரியுமா?
எதுவும் பேசமுடியதவனாய்...என் எடையில் பாதியை குறைத்துவிட்டதாய்..உணரத் தொடங்கியிருந்தேன் நான்! நல்ல வேளையாய்,என் விரல்களைப் பிடித்தவனாய் என்னுடனே வருகின்றான்.ஒரு வேளை,என் பின்னால் அவன் வருவதாய் இருந்தால்,என் எண்ணங்களை அவன் மீது திருப்பியிருப்பான்.இல்லையென்றால்,ஏதோ தேடலின் வெறியில் வெகுதூரம் முன்னே ஒடி அவனைத் நான் தொலைத்திருப்பேன்.
வீடு வந்து சேர்ந்தபோது,என் மனைவி ஒற்றை கதவை மட்டும் திறந்துவைத்து காத்திருந்தாள்.அவள் முகத்தில் பயம் பரவலாய் படர்ந்திருந்தது எனக்கு அப்படமாய்த் தெரிந்தது.
"வீடு வந்து சேர இவ்ளோ நேரமா என்ன?" என்று கோபமும்,பயமும் கலந்தவளாய்...
"பயப்பட வேண்டாம்..பயம்-அது நிலையின் மீதான மோகத்தினால் உண்டாவது." இதைக் கேட்டு திடுக்கிட்டு போனவள்,என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஐயோ...பேசியது நான் தான்..ஆனால் அது நானில்லை!" எப்படிப் புரியவைப்பேன்,என் கண்களை முதன்முதலில் பயத்துடன் பார்க்கும் என்னவளின் கண்களுக்கு!!!