தேசிய கல்வி தினம்

📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖

*தேசிய கல்வி தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️

கல்வியானது......
புழுவாக இருக்கும்
ஒரு மனிதனை வண்ணத்துப்பூச்சியாக
மாற்றிவிடும் கூடு......

விலங்குகளையும்
மனிதர்களையும்
பிரிக்கும் எல்லைக்கோடு
பகுத்தறிவால் மட்டும்
போடப்படவில்லை
படிப்பறிவாலும் போடப்பட்டுள்ளது........

உப்பு தண்ணீரை
முத்தாக
மாற்றும் சிப்பி....
கல்லை
கடவுளாக மாற்றும் சிற்பி ....

கல்வி
வீட்டை மட்டுமல்ல
நாட்டையே தூக்கி
நிறுத்தும் தூண்.....

ஜாதி மதம்
ஏழை பணக்காரன் என்ற
குப்பைகளை எல்லாம்
எரித்து
சாம்பலாக்கும் நெருப்பு......

அன்று
தாய்ப்பாலாக
இருந்தக் கல்வி
இன்று புட்டிப்பாலாக
மாறிவிட்டது.....

ஆங்காங்கே
கடை போட்டு
விற்கப்படுகிறது
கல்வியும்.....

இந்தியா
பெற்ற சுதந்திரம்
பெரியதாக
எதையும்
சாதித்து விடவில்லை
அன்று
ஆங்கிலேயரிடம்
அடிமைப்பட்டு கிடந்தோம்
இன்று
ஆங்கிலப்பள்ளியிடம்
அடிமைப்பட்டு
கிடக்கிறோம்
அவ்வளவுதான்......

இன்றைய கல்வி
"மனிதர்களை"
உருவாக்காமல்
"மதிப்பெண் எடுக்கும்
இயந்திரங்களை"
உருவாக்கிக் கொண்டுள்ளது....

பள்ளிப்பிள்ளைகளில்
பெரும்பாலான
பிள்ளைகள்
"கிளிப்பிள்ளையாகத்"தான்
இருக்கிறார்கள்.......

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு கற்றுக் கொடுக்க
கொண்டு வந்த
கல்வி முறை
கற்றுக் கொடுக்கிறது
"மூட்டை தூக்க" மட்டுமே....|

பாடங்கள்
துரித உணவாகவே
அளிக்கப்படுவதால்
தேர்வறை எங்கும்
வாந்தி நாற்றமே வீசுகிறது....!

கல்வி கற்கும் பள்ளியறை
கலவி நடக்கும்
பள்ளியறையாக
மாறி வருகிறது......

கல்வி
பண்புகளை உருவாக்கும்
"மூலமாக"
பார்த்த பார்வை மாறி
கல்வி
பணம் சம்பாதிக்கும்
"முதலீடாக" பார்க்கப்படுகிறது...

கல்வி நிலையங்கள்
குடியிருக்கும் வீடாகவும்
ஆசிரியர்கள்
பெற்றோர்களாகவும்
பாடங்கள்
வாழ்வதற்கு
ஆதாரமாகவும் மாறும்வரை
அரைகுறை
கல்வியாவது
கற்று வருவோம்
மீண்டும்
ஆதி மனிதனாக
மாறாமல் இருக்க.....!!!

*கவிதை ரசிகன்*

🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Nov-24, 10:09 pm)
பார்வை : 18

மேலே