புருவகாலம் 9 கலியமூர்த்திஇது அப்பாவின் பேரு

அலுப்பு தட்டாத வயல்வெளிகளையும், அருகருகே நிறைந்த காடுகளையும் சுமந்து எந்நேரமும் உடல் உழப்பை மட்டுமே நம்பி இருந்த என் கிராமத்தின் மூடப் பழக்கங்கள் நிறைந்த தெற்கு புறம் பார்த்த ஏழை குடிசை ஒன்றில் தான் அவருடைய தந்தைக்கு முதல் மகனாய் பிறந்தார் என் தந்தை.

அவரின் போதாத காலம் சிறு வய்திலேயே பாட்டி பரலோகத்துக்கு போய்விட்டாள்.

புழுதி தூற்றும் வெயில் காலத்திலும், கண் மறைக்கும் பணி காலத்திலும் இருட்டிய பின்பு விளக்கெடுத்து பார்க்கும் கூன்விழுந்த வயதான கிழடுகளை நம்பி கிடந்த மருத்துவ வசதியில்லாத என் கிராமத்தின் அன்றைய சூழலில் என் பாட்டிக்கு ஐந்தாம் பிரசவம்.

மருத்துவச்சிக்காக வண்டிகட்டி பறந்தது கிராமத்து இளசுகள். ஆளுக்கொருபக்கம் தேடியும் மருத்துவச்சி கிடைக்காமல் சோர்ந்து போனது ஒரு மழைக்காலத்தில் சின்னண்ணன் குடும்பம்.

வயிறு உப்பி வலியால் துடித்தாள் பாட்டி. எத்தனை அழுது தீர்த்தும் மீண்டும் கிடைக்கவில்லை என் தந்தைக்கு இன்னொரு தாய். பிரசவம் பார்க்க ஆளில்லாமல் என் பாட்டி துடி துடித்து இறந்து போன செய்தியை கேட்டு இன்னமும் நான் வருந்தி கொண்டிருக்கிறேன்.

காலம் இவரை இழுத்து கயிற்றில் கட்டிவைத்தது. அழுதுவடித்த கண்ணீர் ஆராய் பெருகி ஓடி ஒரு கட்டத்தில் உறைந்து நின்றது. அப்போது அப்பா வளர்ந்து அண்ணனாகியிருந்தார். தன்னுடைய ஒரே தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டுமே...என்ன செய்வது? சிந்தனையில் யாரோ சூடு போட்டதுபோல இருந்தது அவருக்கு. ஆனாலும், விளையாட்டு புத்தி. நண்பர்களோடு பறந்துவிடுவான் கலியமூர்த்தி...இது அப்பாவின் பேரு.

இந்த காரணத்துக்காக பள்ளிக்கூட வாசனை மறக்க வேண்டி நேர்ந்தது என் தந்தைக்கு. சில நாட்கள் போனபின்பு குழந்தைகளை வளர்க்கும் காரணம் என் தாத்தாவுக்கு இரண்டாம் திருமணம். பின்பு என் தந்தையின் சகோதரர்களின் எண்ணிக்கை ஐந்தானது. இரண்டு சகோதரிகள்.

கலியமூர்த்தியின் மனம் குதூகலித்தது. ஐய்யா ஜாலி இனி விளையாட தம்பி தங்கைங்க இருக்காங்க... சித்தப்பாக்களோடும் அத்தைகளோடும் விளையாடி களித்தார் அப்பா. ஆலங்குளக்கரையிலும் ஆலமரத்தடியிலும் கடலைவயலிலும் சுற்றித்திறிந்தார்கள். அழுக்கு சுமந்த உடலோடு மண் பிசைந்து சிரித்தார்கள். குளம் குட்டைகளில் குதித்து துள்ளினார்கள்.

பிறப்பின் தொப்புள்கொடி வேறாயிருப்பினும் உறவுகள் இவர்களை சேர்த்து வைத்திருக்கிறது இன்றும். தாய் இல்லாத வருத்தத்தை சகோதர்களும் சகோதரிகளும் போக்கியிருக்கிறார்கள் அப்பாவுக்கு. அவர்களுக்கு இப்போதாவது நான் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். (நேரில் சொல்ல முடியாததை இந்த பக்கங்கள் என்றாவது அவர்களிடம் நிச்சயம் சொல்லும் நன்றி).

எத்தனை நாள் இப்படி கழித்துவிட முடியும்? வாழ்க்கையின் பயணத்தில் இது போல ஆயிரம் நிகழும். துக்கங்களும் இன்பங்களும் மாறி மாறி வரும். இது, வாழ்க்கை கற்று தந்த பாடம். வாழவேண்டுமே... பல நேரங்களில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடும் தந்தையை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பது? போதிய உணவு கிடைக்காத சூழலில் காய்ந்து போன வயிறு பசிக்கு உணவை தேடியது. உயிர் வாழ உணவு அவசியம் என்பதை அவர்களின் ஏழ்மை உணர்த்தியது.

பள்ளி கல்வி துறந்து சிறு வயதிலேயே வியர்வையின் வாசம் விரித்து வேலை செய்ய கற்று கொண்டது என் குடும்பம்.

வயல் வேளைக்கும், மரம் வெட்டவும், மூட்டை தூக்கவும், நெல் அறுக்கவும், கல் சுமக்கவும் கற்றுக் கொண்டது குடும்பம். வாழ்வின் எதார்த்தத்தை உணர்ந்து அன்று முதன் முதலாய் சிறகு விரிக்க ஆரம்பித்தன அந்த உச்சிவெயில் பறவைகள்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (27-Mar-15, 9:35 pm)
பார்வை : 233

மேலே