நனைந்த மழை-வித்யா

நனைந்த மழை-வித்யா


அன்றைய மழையின் வண்ணங்கள் வரைதல் பொருட்டு விசும்பிக் கொண்டிருந்தது தூரிகை. மழையின் கால்கள் பால்வீதிக் கடக்கும் போது அக்கவிஞனின் தொலை நோக்குப்பார்வையைக் கண்டு சிலிர்த்துக் கொண்டது. கொஞ்சம் கவிக்குள் எட்டிப் பார்த்து...... முன் வியந்தது....பின் முறைத்தது அதன் பின் சிரித்தது.

துளிகளின் உரசலில் யுகங்கள் தேய்ந்திடக் கூடுமென இடைவெளி விட்டே வந்தடைகிறது இம்மழை ... தூரிகையின் வாசத்தில் அத்துளிகளின் தனித் தனிப்பால்வீதிகள் மணந்து கொண்டே. மையப்புள்ளியோடு தொடங்கும் வட்டத்திற்கும், தோராயப் புள்ளிகளோடு முடியும் கோடுகளுக்கும் வித்தியாசமில்லாது போனால் மழை சொல்லும் வாழ்வியல் கணக்குக்கள் வெற்றுப்பக்கங்களில் சில்லென அச்சிடப்பட்டிருக்கும்.

கடந்துப்போன சாரல் மழைக்கும், வாசலில் தேங்கிப்போன பெருமழைக்கும், பாதம் நனைத்த கோடை மழைக்கும், பதம் பார்த்த கார் மழைக்கும் நினைவுக்கோபுரங்கள் எழுப்பிக் கொண்டிருந்தது...........அதே தூரிகைதான். இப்போது இன்னும் சப்தமாக சிரித்தது. பால் வீதியில் கால் தடங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆதலால் கோபுரங்களில் ஒன்றிரண்டு குறைந்திருக்கலாமென்று உரக்கக் கத்திக் கொண்டே....(தூரிகை).

இப்போது மீண்டும் மழை...... கோடி சுகந்தங்கள் விற்றுக் கொண்டிருந்தது.ஆம்...ஒரு அழகியை வேசியாக்கி அவள் மார்பில் முகம் புதைப்பது போலவே. "நீர்பாளம்...". ஏன் பூபாளங்கள் இருக்கும் போது நீர்பாலம் இருக்கக் கூடாதா ..? ஒரு மழைத்துளியின் பால்வீதி(நீர்பாளம்)......... திறந்து கிடந்த வானிலிருந்து பூட்டிக்கிடக்கும் பூமி வரை.. மூச்சிரைக்க மூச்சிரைக்க வரைந்துக் கொண்டிருந்தது தூரிகை.

ஒவ்வொருப் பால்வீதிக்குள்ளும் ஆயிரமாயிரம் காதல்களும்... அதற்கானக் காரணங்களும் கொட்டிக்கிடக்கும். கதை சொல்பவனின் குரல் மட்டுமே வெளிச்ச வீதிக்கு இருளைப் பரிசளிக்கும். கதைக்குள் கதை பார்த்ததில்லையா.......? இத்தூரிகையாகிய கதை சொல்லியின் சலனமில்லா குரலில் அவ்வொருத்துளி மழையின் பால்வீதியில் பதிந்த காலடிச் சந்தங்கள் கேட்போம்.

அம்மழைத்துளியின் பால் வீதியெங்கும் பனித்துளிகள்........முட்களைக் கொய்துவிட்டு, பூக்களைத் தீண்டிக் காம்புகளைத் தாங்கும் காதல். அதன் காமப் பிரதேசங்களில் எல்லாம் கடவுள் பிரவேசிக்கும். இல்லாத ஒன்றிற்குள் இருப்பதைப் புதைத்து புதுத் தேடல் விதைத்து உறங்கா இரவுகளிலெல்லாம் கனவுகளாய் விழித்திருக்கும்.

அதன் கோடை இரவுகளெல்லாம் நிர்வாணமாய் காற்று வாங்கும்... பின்வரும் இரவுகளெல்லாம் இதையே வழிமொழிந்து பின்தொடரும் . சில சமயங்களில் குடைக்காம்பு முறித்தெறிந்து தொப்பலாக நனையும். இன்னும் சில சமயங்களில் குடை தேடித் திரியும். நனைக்க மறந்து நனைந்து உலவும்.

எவ்வளவு நெருங்கியும்
தூரத்து நிலவாகவே
இக்காதல் மட்டும்

எந்தக்
கதை சொல்லியோ
கவி பேசியோ
காமம் கூட்டிக்
காதலைக் குறைக்கலாம்
அதுக் கதையாகவோ
கவியாகவோ மட்டுமே
இருக்கும்
காதலாக இராது.....!!

முன்பொரு நாள் வீதி உலா வந்த வெண்பஞ்சு பாதங்களிலொன்று பாளம் பாலமாக வெடித்திருந்தது. தூரிகை அதைத் தன் கண்ணீரில் நனைத்து முதுவேனிலில் பதிவேற்றம் செய்தது. இன்னொரு மேகம் தன் பாதங்கள் ஏற்றி இதழ்கள் இறக்கி இடம் மாற்றி பால்வீதியில் தன் சுவடுகள் பதித்திருந்தது.. உயிருறிஞ்சல்களில் மிஞ்சிய நல்லி எலும்பாய்.

அடுத்தொரு விண்மீன் .......அநேகமாக முக்காடு அணிந்திருக்கக் கூடும். வழியெங்கும் மூடப்பட்ட சிறு வெளிச்சம். பெரும் ஒளிச்சிதறல். போர் முழக்கங்களில் அடங்கிய முனங்கல்களோடு வளையல்கள் உடைத்திருந்தது... அடுத்த அரங்கேற்றத்திற்கான ஒத்திகையில். (இன்னும்....இவ்வீதி உலாவினில்........தென்றலும், தேரில் இறங்கிய மின்னலும்,அடக்கம்.)

இம்முறை நிலா........ முழு மதி...... தூரிகை தன் மீசையைத் தடவிப்பார்த்துக் கொண்டது....அது இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறதாவென்று.மழையின் பால்வீதியில் தொப்பலாக நனைத்த நிலவை வரையும் தூரிகை விழிகள் யாசித்துக் கொண்டிருந்தது. நனைந்த மழை இன்னும் என்னவெல்லாம் யாசித்துக் கொண்டிருக்குமோ...? காலம் நீங்கலாகக் காதல் சொல்லிக் கொடுத்தக் கடவுளுக்குக் காமம் பலி ஈந்து முனங்கல் கடந்து விசும்பல் கடந்து வேதம் தேடி தவம் நாடி தழுவல்கள் துறந்து நனைந்துக் கொண்டே நின்றது மழை......... உலரமனமில்லாமல்.உலர்ந்துக்கொண்டே நனைந்தது தூரிகை......நிறுத்த மனமில்லாமல்.


சில்லு சில்லாகத் தெரித்தது நிலா........... மழையவனின் பால் வீதியின் பாதி வழியிலிருந்து தொடங்கியிருந்தது சில்லுகளின் சிதறல்கள்.........!! தூரிகையவன் வரைந்த காவியத்தில் நிலவுத்துண்டுகள் ஒளி வீசிக் கொண்டிருந்தது.


மின்னலோ....மேகமோ.......பனியோ.......பூவோ........மீளவோன்னா தூரத்தில் கானலாய் நெளிந்தது காதலுக்கு முன்னே...........!!



யாதொன்றும் சொல்லிட
நான் விளைந்திடவில்லை
காமம் நீட்டி
காதல் குறுக்கி
கதை சொல்லியாய்
கவி பேசியாய்

முன்னது வலியதே
ஆயினும்
வளைந்துவிடும்
உயிருறுக்கும் காதலினூடே............!!

எழுதியவர் : வித்யா (28-Mar-15, 4:58 pm)
பார்வை : 451

மேலே