யுகங்கள் தாண்டும் சிறகுகள் 10- கவிஜி

கண்டதும் காதல் வந்ததுதண்டா ..... வந்ததும்... காமம் வந்ததுண்டா... எனக்கு ரெண்டும் வந்தது....ரெண்டும் வேறு வேறாக.... வேறும், வேறு வேறாக... வேர் கொண்ட நீளமென, வீதி தேடிய விடுமுறை நாட்களென.. ....கவிதையாக, கதையாக.. கற்பனையாக..காதல் சுகம் கொண்டது.. அதில் துக்கம்.. ஒன்றுமேயில்லை...நிஜங்கள் உடைக்கும் மொழிகளில் அவளின் உருவம்... ஓடுவதும் ஆடுவதும், அரட்டுவதும் நடுநிசி நிழல் அவள்..
காதலைக் கொண்டாட சிறந்த வழி .. காதலாகி விடுவதுதான்.. காதலும் காமமும் வேறு வேறல்ல... உற்று நோக்கின்.. காட்டாறுதான்... நான் காதலைக் கடக்க முயற்சி செய்ததே இல்லை...அது மூச்சுக் காற்றாய் இருந்து விட்டு போகட்டுமே....இருப்பதும் இல்லாமையும் பொருள் கொண்ட இரண்டாய் இருப்பதில் காதல் ஒன்றும் புதியவை அல்ல.. அதே சமயம் ஒன்றுமேயில்லாத பழையவையும் அல்ல....

நான் திரும்பிப் பார்க்கிறேன்....

"முதுகு மச்சத்தைப் போல
முயங்கி கிடக்கிறது
பூனைகள் கொண்ட
மதில் ஒன்றாய்
என்
பள்ளி கால காதல்........"

நான் எண்பதுகளில் பிறந்தவன்....ஆக... காதலுக்கு மிகச் சிறந்த தூது.... கடிதங்களே என்பது என் எண்ணமாக இருப்பதில் தவறொன்றும் இருக்க முடியாது........ நாம் இன்று ஏறக்குறைய கடிதங்களை மறந்து விட்டோம் என்றே யோசிக்கிறேன்.... கடிதங்கள் தீரா காதல்களுக்கான சாட்சிகள்... சொல்லுதலில் கிள்ளுதல் உள்பட அள்ளுதல்... அத்தனை சுலபம், கடிதம்...... அது நீரோட்டம்... பட்டும் படாமல் நீரினில் ஓடும் இலையோட்டம்.... இலையினில் மேல் படரும் ஓர் எறும்பின் உயிராட்டம்....கரை தொட்டு செல்லும் நதியின் நிழலென கடிதங்கள் சூட்சுமங்கள் விதைத்துக் கொண்டே இருக்கின்றன... தொடுவானம் வரைந்து போகும் மாலையில் மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பிறப்பது கடிதங்களின் இதழ் பிரிதலில்தான்...அது இளையராஜாவின் பாடலைப் போல... ஒவ்வொரு முறைப் படிக்கும் போதும் ஒவ்வொரு வகையான காதலைச் சொல்லிக் கொண்டே இருக்கும்...

பள்ளி காதல், காதலே இல்லை.. அது ஓர் இனக்கவர்ச்சி... அதன் மூலம் வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள்... என்று நம்மில் பலர் கூறுவோம்... எனக்கும் அதில் உடன்பாடுதான்... ஆனால்.... பள்ளியில் காதலித்த எத்தனையோ பேர் இன்று கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்வில் நன்றாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது... "ஆதலால் காதல் செய்வோம் என்பதை, சரியாகவும் புரிந்து கொள்ளும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எல்லா வயதிலும்....எல்லா காலகட்டங்களிலும்...."

காதலில் பிரச்சினையே எங்கு ஆரம்பிக்கிறது என்றால்...... தன்முனைப்பு.... அதாவது ஒருவர் இன்னொருவரை ஆள நினைப்பது...தன் காதலை தாண்டியும் அதிகமான காதலை நீ தர வேண்டும் என்று எதிர் பார்ப்பது.... காதலில் எதிர்பார்ப்பு, உடைந்து விடும் குமிழ் போல.. உடையும் வரை தான் அழகு....அது, மன நலம் சார்ந்த தேடல்.... கொஞ்சம் பிசகினாலும்.. சொல்லொணாத் துயரத்தில்...ஆரம்பமே இல்லாமல் கண்ணாடி துகள்களாக்கி கடவுள் தேட வைத்து விடும்... ஆக, ஆணி வேறே இதுதான்... இங்கு கவனமாக இருப்பின்... எந்த வயதிலும் காதல், காதல்தான்... வாய்ப்பு கிடைத்தால் கலவியில் ஈடுபட நினைக்கும் எண்ணம் வரத்தான் செய்யும், இரு பாலருக்கும்.... அப்படித்தான் நம் உடல்கூறு படைக்கப் பட்டிருக்கிறது...(நேரம் வரும் வரை அடக்குதல் தான் முறை... அது கூட இல்லை என்றால்... காதலில் எதுதான் சுகம்...) எதிர் எதிர் கவர்ச்சி இருக்கும் வரைதான்.. சுவாரஷ்யமே... இல்லை எனில்... வீட்டுகொரு போதி வளர்ப்போம்.... என்று விளையாட்டாக நாங்கள் நண்பர்களுடன் பேசிக் கொள்வதுண்டு...... ஆனால்.. போதி காதலுக்கும் பொருந்தும்.. கலவிக்கும் பொருந்தும்.....ஞானத்துக்கும் பொருத்தும்,... அது திருக்குறள் போல.. போதி மரத்தில் கிடைக்காத இலைகளே இல்லை...முதலில் போதி மரம் கிடைக்க வேண்டும்...

ஓஷோ கூறுவார்.... "ஏசு மிகவும் முரண்பட்டவர்... ஆனால் அர்த்தமுள்ள முரண்பாடுகள் அவை... அவைகளைப் புரிந்து கொள்ள பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ...என்று...."

நான் ஏன் இப்போது போதிக்கும் ஏசுவுக்கும் முடிச்சு போடுகிறேன் என்று யோசிக்கிறீர்களா...? நீங்கள் யோசிக்க வேண்டும் என்றுதான்...! காதலைப் போல முரண்பாடு உலகில் மிகச் சிறந்த சான்றாக உடனடியாக எதையும் சொல்லி விட முடியாது... ஆனால் அந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ள நீங்கள் உங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...வேண்டுதல் எல்லாமே.. வேண்டிய பின்னால் வரும் மனநிலையா... மனநிலை மாறிய பின்தான் வேண்டுதலே வருகிறதா...?.... தொடர்வதைப் போல நிற்பதும் ஒன்றுதான் என்றொரு சிந்தனை வந்து விடில் உங்கள் பயணம் எவ்வழியிலும் உயிர்க்கும்... காடு கொள்ளாத இரைச்சலை பாதைகள் உள் வாங்குவதே இல்லை.. அது தூரமாய் தனிமைக்குள் தன்னை இணைத்து கொண்டே நீள்கிறது... பெருங்காதல் இப்படித்தான் இருக்கும்..... அது சாரல் மழை கொண்ட பெரும் வானமாய் விரிந்து கொண்டே இருக்கும்..... பறக்க முடிவெடுத்த பின் வானத்தின் நிறம் பற்றி யோசிக்காது பறவைகள்...

"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து."

தாடிக்காரர்... தாத்தாவுக்கு தாத்தா...சொல்ல சொல்ல இனிக்கும்... ஒவ்வொரு சொல்லும் இனிக்கும்.. சொல்லில் நமக்கு சொல்லாமல் விட்ட காலம் கூட இனிக்கும்.. கிடைத்தவையே இத்தனை இனிப்பென்றால்... கிடைக்காதவைகள் எத்தனை இனிப்போ...! வள்ளுவனின்.. சொல்... நிஜமாகவே எனக்கு இனித்தது.. நான் 11வது படிக்கும் போது....(யுகங்கள் தாண்டும் சிறகுகள்-1ல்.. என் தற்கொலை முயற்சி பற்றி யாரோ ஒரு தோழி கேட்ட கேள்விக்கு இங்கு கொஞ்சம் பதில் கிடைக்கும்...) தேடுங்கள் கிடைக்கப்படும் என்பதும் ஏசுவின் வார்த்தையாகத்தான் இருக்கும்... தட்டினால் திறக்கப் படும் என்கிற போதும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிற போதும், தேடினால் கிடைக்காமலே போய் விடும்...எதை நோக்கி நீ போகிறாயோ.... அது உன்னிடம் வந்தே தீரும்.... அதற்குதான், "நல்லதே நினை" என்று இந்து மார்க்கம் சொல்கிறது.... "நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்" என்று விவிலியமும் கூறுகிறது...

பாருங்கள், கடிதங்களைப் பற்றி கூறிக் கொண்டே எங்கெங்கோ வந்து விட்டேன்.... காதல் அப்படித்தான்.. அது எப்புள்ளியில் ஆரம்பிக்குமோ தெரியாது... எப்புள்ளியில் தொடருமோ தெரியாது..... ஆனால் புள்ளிகள் இணைந்து கோலம் ஆகும்...ஆம்.... கோலமான புள்ளிகளின் பின்னோக்கிய சுழற்சியில்.... நானும் அவளும்.. நோக்கினோம்.... காக்க காக்க கனகவேல் காக்க.. நோக்க நோக்க நொடியில் ...... அப்படிதான் இருந்தது அன்றைய தினம்.... மூக்குத்தி பெண் பற்றி அடிக்கடி கூறுகிறேனே... அது அவள் தான்....பெயர்....ம்ம்ம்.... நீலவேணி...(பெயர் மாத்தி விட்டேன்) வாலி பால் விளையாடும் போது அவள் அடித்த பந்து, ஓரமாய் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த எங்களில்....(படித்துக் கொண்டிருந்த) அதுவும் குறிப்பாக என் தலையில் பட.. நான் சட்டென மயக்கமானேன்...

ஓடி வந்தவள்... மிரட்சியோடு... என் அருகே மண்டியிட்டு அமர்ந்தாள்... மற்றவர்கள் அனைவரும் தண்ணீர் எடுக்க,, என்னை அதட்டி எழுப்ப, என்னாச்சு என்று சல சலக்க... அவள் மட்டும் என்னையே பார்த்துக் கொண்டு, முட்டிக் கொண்டிருந்த கண்ணீரை கீழே விழாமல் திரண்ட கண்களோடு காக்க காக்க கனகவேல் காக்க.. என்று முணு முணுத்துக் கொண்டுதானிருந்திருக்க வேண்டும்... அதற்கு மேல் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. ஒரு கண்ணை மெல்ல மேலே திறந்து, மெல்ல அடுத்த கண்ணையும் திறக்க, நண்பர்கள் என்னை அடிக்க துரத்தினார்கள்.. ஓடினேன்... ஓடிக் கொண்டே இருந்த என் பார்வை முழுக்க அவள் மீதே இருந்தது...பார்க்க பார்க்க பரவசம்... நான் நூல் அறுந்த பட்டமாக அவள் நின்ற இடத்தையே சுற்றினேன்... சுற்ற சுற்ற வேகமெடுத்தது பூமி.. என்பதாய் சுழல், என் மனமெங்கும்.. என் மௌனமெங்கும்...

"கண்களில் விழுந்து மனதுக்குள் வளரும் எந்த பூ அவள்" என்ற யோசனையில்.. டோபமைன் வேலை செய்ய தொடங்கியது...... செய்தல், செயல் படுதல், செயல் பட்டுக் கொண்டே இருத்தல்.... இருத்தலின் வட்டமென... இல்லாத திட்டம் மனதுக்குள் பூந்தோட்டோம் வளர்க்கத் தொடங்கியது... தொடங்குதலில் உள்ள சுலபம்.. அடுத்தடுத்து இருப்பதில்லை ... அது தொடர்ந்தாலும்....

"பங்காளி..... அந்த புள்ள யார்டா..." என்றேன்....

பங்காளி.... என்னை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்து விட்டு... "ஏன்.. கேக்கற" என்றான்...

"இல்ல.. இத்தன நாளா இப்டி ஒரு பொண்ணு என் கண்ணுல படவே இல்ல... என்னடா.. இவ்ளோ அழகா இருக்கா..." என்றேன்...
எனக்கு ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருந்தது... குறைந்த பட்சம் இப்போதைக்கு அவளின் பெயராவது தெரிய வேண்டும்...

"வேகமாய் வந்தும்
முட்டாமல், கணத்தில்
வழி வாங்கி பறக்கும்
ஒரு பறவையின் வெளியில்
நான்
யார் நட்டிய
மைல்கல்....."

அப்போதைய சூழலுக்கு இப்பொது யோசித்த கவிதை.. அப்போதும் நான் கடிதங்கள் எழுதுவதில் கில்லாடி... (கில்லாடி- உபயம் தேவசிகாமணி...) நிறைய பேருக்கு எழுதிக் கொடுத்து சேர்த்தும் வைத்திருக்கிறேன்..... பிரித்தும் வைத்திருக்கிறேன்...... பஞ்சாயத்திலும் நின்று இருக்கிறேன் (பய புள்ளைக ரெண்டு பேரும் கடைசியா என்னை கை காட்டி விட்ருவாங்க... காதல் வாழ்க)

முடிவு செய்தாயிற்று....... காதலை சொல்லி விடுவது என்று.... நிறைய காதல்கள் சொல்லாமல்தான் காணாமல் போய் விடுகின்றன..... கண்களை பார்த்து உன்னை காதலிக்கிறேன் என்று கூறுதல் எதிர் பாலரின் உரிமை.. பிடித்தால் பிடிக்கும், இல்லையென்றால் இல்லை..அவ்வளவு தான்.... இப்படி பதில் சொல்லிப் போய் விட்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை...அதை விட்டு அமிலம் வீசுமளவுக்கு போவது அறிவீனம்...இன்றும் எத்தனை முகங்கள் அமில வீச்சால் உருக் குலைந்து கிடக்கின்றன.... வீசும் விரல்களில் துளி கூட காதல் இருக்கவே முடியாது...

"காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்...
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானமுண்டாம், சிற்பமுதர்க் கலைகளுண்டாம்
ஆதலினார் காதல் செய்வீர்...."

என்று மரணத்தையே பொய் என்று கூறும் பாரதியின் காதல் அமில வீச்சுக்குள் போகிறதென்றால் அங்கு காதல் இல்லை.. கலவி கூட இல்லை.. அது வக்கிரம்... மனப் பிறழ்வு... மருத்தவரைதான் பார்க்க வேண்டும்.. எங்களுக்கு அப்போதே இந்த தெளிவு எப்படியோ இருந்தது.....ஆதலினால் நாங்கள் காதலித்தோம்..... காதலைக் கொண்டாடும்... எங்கள் கதையில் ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே.. அவள் +2... நான் +1....

பந்து விழும் போது தெரியவில்லையே... பல கட்ட யோசனைக்கு பின்... ஒரு திங்கள் காலை.. அவளின் வகுப்புக்குள் சென்று எங்கள் சீனியர்கள் முன்னால்.. கடிதம் நீட்டினேன்.. அவள் முறைத்துக் கொண்டே வாங்கி படித்தாள்.... சத்தம் போட்டு படித்தாள்... கிட்டதட்ட என்னை எல்லாருமே கேலி தான் செய்தார்கள்.. சீனியர் நண்பர்கள் என்னை முறைத்தார்கள்... பங்காளி சொல்லிதான் அனுப்பி இருந்தான்.. "பங்காளி எவனாது வாய் பேசினா இழுத்துறு.. பாத்துக்கலாம்" என்று.. நான் சுற்றியும் பார்த்தேன்... பேன்ட் பாக்கெட்டில் காம்பஸ் தயாராக இருந்தது....(காதல் எல்லாம் செய்யும்.... சில போது இல்லாமலும்)..ஆனால் யாரும் ஒன்றும் செய்யவில்லை.... நீலவேணி என் கடிதத்தை கிழித்து எறிந்து விட்டாள்...நான் நிஜமாகவே கண்கள் கலங்கி வெளியே வந்தேன்... அதோடு சரி.. அதற்கு பின் அவளை நான் பார்க்கவே இல்லை... காதலைப் போலொரு வலி எதுவும் இருக்க முடியாது... ஆனால் அந்த வலிக்குள் இருக்கும் வாழ்க்கை மிகவும் அந்தரங்கமானது.... காதல் உன்னத நிலை அடையும் போது அங்கு காதலிக்கு தேவையே இல்லை என்பதாக நான் நம்பிய பின்னோக்கிய இடம் இது..... அவள் மீது கோபமோ வருத்தமோ எனக்கு இருக்கவேயில்லை...

"முடிந்த பாதையில்
நின்று எட்டிப்
பார்த்தேன்
எதிர்திசையில்
இத்திசை
எதிராக தெரிய
நான்
மீண்டும்
நடக்கத் தொடங்கினேன்....
முடிந்த பாதையில்
தூரம்
இருந்தது...."

என்பது போல.... ஒரு வெற்றுப் படகு எனதெங்கும் இருந்ததை இப்போது உணர்கிறேன்... நான் சலனமற்ற தூரத்தில் நீலவேணி எனக்குள் நிரம்பித்தான் இருக்க வேண்டும்.. நிறை குடம் தளும்பாது என்பது போல அவளைப் பற்றி நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே இல்லை... என் பாட்டி கூட "என்ன ஒரு மாதிரி இருக்க... ஏதும் சிநேகிதகாரங்க கூட சண்டையா" என்றது சாப்பாடு ஊட்டியபடியே...

நான் "காசு குடு.. படம் பாக்கணும்" என்று 2 ரூபாயை வாங்கிக் கொண்டு பூவே உனக்காக பார்க்க போனேன்.. அது நான் பார்க்கும் 8வது முறை....

"உண்டு உறங்கும் அதுவாகவே இரு..."-. பகவத் கீதை கூறுதே... அப்படித்தான் இருந்தேன்...இருப்பது எல்லாம் இங்கிருப்பவையே... நாளை அது இல்லாமலும் போகலாம்.... என்பது போல... இன்றும் இல்லாமல் நின்ற நான்.. இருத்தலில் அவளை தக்க வைத்துக் கொண்டேதான் இருந்தேன்.......காதல் நெருங்கி வரும் போது இருப்பதை விட விலகிப் போகும் போது இன்னும் ஸ்திரமாகிறது... எனக்கு ஆனது.. நான் நம்பினேன்... நீ எதை நோக்கி போகிறாயோ.. எதை ஆழமாக நம்புகிறாயோ அது கிடைக்கும்...... அதுவாகவே ஆவாய்... நான் நம்பினேன்...

"எப்போதும் பூக்காத
ஆனால் வெளிப்படா மலர்களின்
ஒளியைத் தன் பால்
தாங்கி இருக்கும்
ஒரு செடியைப் போல
உன்னைக் காதலிக்கிறேன்...."

நெருடா...

வாழ்வின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்திய என் முதல் காதல் எனக்கு கிடைத்தது... பள்ளி ஆண்டு விழாவில் "அதாண்ட இதாண்டா..." பாடலுக்கு நடனம் ஆடி முடித்து கீழே வருகையில் அத்தனை பாராட்டுக் கைகளுடன் அவளின் கையும் இருந்து... நான் காதல் சொல்லி 90 நாட்களுக்கு பின் அந்த கையோடு சேர்ந்து ஒரு கடிதம் இருந்தது...

"உன்ன எனக்கு முதல்லேயே பிடிக்கும்... ஆனா எங்க பசங்க உனக்கு நிறைய கேல் பிரெண்ட்ஸ் இருக்காங்கனு சொல்லிட்டாங்க.... கொஞ்ச நாள் உன்ன கவனிச்சு பார்த்தேன்... அவுங்க எல்லாருமே உனக்கு பிரெண்ட்ஸ்தான்னு தெரிஞ்சுது...உன் ஹேர் ஸ்டைல் சூப்பர் தெரியுமா... நானும் உன்ன லவ் பண்றேன் அர்ஜுன்... சாரி... ரெம்ப டைம் எடுத்துகிட்டேன்...."

நீலவேணி...
22.02.1997

"ஏன் பதிலுக்கு இவ்ளோ லேட்... நம்ம மேட்டர் என் தம்பிக்கு தெரியும்.. அவனுக்கு உன்ன ரெம்ப பிடிக்குமாம்... நான் கட்டுனா உன்ன தான் கட்டணுமாம்... நீ நல்லா ஆடுவியாம்... செமையா பேசுவியாம்... கராத்தே எல்லாம் தெரியுமாம்... நேத்து முழுக்க உன்ன பத்தியேதான் பேச்சு... ஆமா நான் உன்ன எப்டி கூப்டறது... அவன் உன்ன மாமானு கூப்டறான்..."

நீலா..
26.02.1997

"உன்ன ரெம்ப பிடிக்கும் அர்ஜுன்... சீக்கிரம் படிச்சு முடிச்சு வேலைக்கு போய் நாம் சேரனும்.... என் தம்பி நம்ம கூடயே இருக்கட்டும்.. சரியா... போன தடவை முத்தா தரலேன்னு கோவம் தான... சரி அன்பு முத்தங்கள்..சீக்கிரம் பதில் எழுது.... சைக்கிள்ல் எதுக்கு அவ்ளோ வேகமா போற... அப்புறம் நீ நடக்கறது சூப்பர்ரா இருக்கு அர்ஜுன்...அதும் நம்ம யூனிபாம்ல.... சான்சே இல்ல........ பாத்துட்டேதான் இருப்பேன்...

உன்னை ஒரு நாள் பிரிந்து இருப்பேன்... அன்று நான் இறந்திருப்பேன்..."

நீலார்ஜுன்...
02.03.1997

உனைப் பார்க்காத இந்த சனி ஞாயிறை நான் வெறுக்கிறேன்.....நேற்று ஒரு கனவு... உன் சைக்கிளை நானும் என் சைக்கிளை நீயும் ஓட்டி செல்கிறோம்... எங்கு போகிறோம் என்று தெரியவில்லை... ஆனால்.... நன்றாக மழை வந்து கொண்டிருக்கிறது.... நாம் மட்டும் நனையவில்லை..........நாளை மதியம் சாப்பாடு கொண்டு வராதே.... நான் கொண்டு வருகிறேன்... அப்புறம் இன்னைக்கு அந்த கனவு வந்தா எங்க போறோம்னு பாத்துட்டு வரேன்.. சரியா மாமா...லவ் யூ டா....

நீலார்ஜுன்...
10.03.1997


அந்தக் கடிதங்கள் இன்னும் என்னிடம் இருக்கின்றன... அது கொண்ட காதலை எழுத இங்கு பக்கங்கள் பத்தாது... பத்தாத பக்கங்களில் அவள் யாருமறியா கடிதத்தின் ஆழத்தை, தூரத்தை எனக்குள் தூவிக் கொண்டே இருக்கிறாள்....அது மனங்களின் நுட்ப வெளிப்பாட்டை விவரித்திருக்கிறது.... வெளிகளின் ஆசுவாசத்தை உணர்த்தி இருக்கிறது... என் இருண்மை நாட்களின் விடிவெள்ளியாய் என்னை நகர்த்தி இருக்கிறது...எனைக் கடித்த மூட்டை பூச்சிகளையெல்லாம்... சுவற்றில் ஈசி மலர வைத்த அற்புதங்களின் கோட்டோவிய கவிதைகளை விடியலாக்கியிருக்கிறது.... மிகப் பெரிய நம்பிக்கையை எனக்குள் ஆழ் கிணற்றைப் போல.. நீர் இறைத்திருக்கிறது....பெரும் விருட்சங்களின் விதைகளை, அது தாங்கியபடியே எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது...உள் இருப்பது போலவே வெளியும் ஆனது.. அவளோடு, இருந்த அற்புத கணங்கள்.... அங்கே நான் என்ற அகங்காரம் துளியும் இல்லை... தான் என்ற இறுமாப்பு துகளாய் கூட இல்லை... நாங்கள் வெறும் காதலாக இருந்தோம்... முத்தங்களாக திரிந்தோம்.....

"உன் மூக்குத்தியின்
வெளிச்சத்தில் கடந்து வந்தேன்
அந்த இரவை....."

என்ற, பழனி பாரதியின் வரிகளை நினைத்துப் பார்க்கிறேன்.... ஆம்.... அதன் பின் எத்தனையோ மாலை நேரங்களை... நான் நீலவேணியின் மூக்குத்தி வெளிச்சத்தில் கடந்து வந்திருக்கிறேன்.. கடக்கவே முடியாத வெளிச்சம் அவள்... ஒற்றை புன்னைகையில் ஒரு கூடைக் கனவுகளை கொட்டி விட்டு நின்று சிரிக்கும் மாயஜாலம் அவளின் அருகாமையில் கிடைத்ததுண்டு..... நினைக்க நினைக்க அதிகமாகும் காதல் இன்றும் கூட அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது...... கூடைகள் நிரம்பி வழியும் என் இதயத்தில் இன்னுமவள் முதல் பூ வாகவே இருக்கிறாள்...அது தீர்க்க முடியாத அன்பின் சுவடுகள்....

அன்பின் பொருள்.... ஆழமானது... அது சமத்துவம் நிறைந்தது... சாத்திரம் உடைத்தது...மேல் கீழ் இல்லாத சமநிலை.... காதல் கொண்ட நிலையில் பால்மயக்கம் கூட இருக்கலாம்.... தான் மயக்கம் கூடாது.... தவிப்புகளில் கொண்ட ஞானம் பெறுதலை விட தருவதில் உயரம் போகிறது....காதலை இன்னும் இன்னும் உயரத்தில் நான் கண்ட தருணம்.. கார்ல் மார்க்ஸ்க்கும், ஜென்னிக்கும் இடையேயான காதல்.... காதலில் முதலாளித்துவம் கூடாது (எதிலும் கூடாது) என்பதற்கு இவர்களின் காதல் எடுத்துக்காட்டு.. நான் யோசித்துப் பார்க்கிறேன்.. எங்கள் காதலில்கூட சமத்துவமே இருந்திருக்கிறது....படித்து பெரியவர்களாகி, இருவருமே வேலைக்கு போக வேண்டும் என்று நாங்கள் அப்போதே விரும்பினோம்... எதிலிருந்து எதை எடுத்தாலும் ஏதாவது கிடைக்கும்.. எதிலிருந்து உழைப்பை எடுத்து விட்டாலும் அங்கு ஒன்றுமே மிஞ்சாது என்ற பொருளாத தத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ, அன்றே யோசித்திருக்கிறோம்....

ஆம் நண்பர்களே ....இந்த இடத்தில் நான் உள்ளே வர வேண்டி இருக்கிறது..

"எந்த விதையில் என்ன முளைக்குமென
ஆராய்ந்து கொண்டிராதே...
விதை..! அதில் அது தான் முளைக்கும்..." என்ற அய்யா புவியரசுவின் கவிதையைப் போல...நீலவேணியின், அர்ஜுனின் காதல்.. வேலைக்கு சென்று இருவரும் நன்றாக சம்பாதித்து.... இந்த சமூகத்தில் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பிய ஓரு விதை... உழைக்க மறந்தவன் உணவாக கூட போக மாட்டான் என்பதே எனது எண்ணம்... உழைப்பே பிரதானம்... இதோ போன வாரம் இறந்து போன "லீ க்வான் யூ" - பொருளாதரத்தில் சிங்கப்பூரை உலகிலேயே மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்தவர்..

எதை முதலீடாக போட்டிருந்தாலும் இத்தனை தூரம் முன்னுக்கு வந்திருக்க முடியாது.. உழைப்பை போட்டதினால்தான்... சமயோசித அறிவோடு கூட உழைப்பு ஒரு போதும் கை விடாது.... என்பதற்கு இவர் மிகப் பெரிய உதாரணம்.. வேறு வேறு கலாச்சாரங்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமே... அங்கு வெற்றியைக் கொடுத்தது.. காதலும் கூட.. இரு வேற எண்ணங்கள் கொண்ட மனங்களின் கூடு தான்...... முதலில் நல்ல முகம் மட்டுமே தெரியும்.. பின் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொரு முகம் தெரிய வரும்.. அங்குதான் சுயரூபம் வெளி வந்து முகமூடி கிழிந்து அருவருப்பான வார்தைகளால் ஒருவரையொருவர் புறம் தள்ளுகின்றார்கள்... எங்களுக்குள் அப்படி ஒன்றுமே இல்லை.... நிறைவாகவே காதலைக் கடந்திருக்கிறோம்... நாங்கள் பிரியவும் இல்லை. சேரவும் இல்லை... அளவு கடந்து அன்பு துளியில் சங்கமித்த ஈரம் இன்றும் எங்கள் மனங்களில் ..

"மிகப் பெரிய கடலில் கலக்க ஒரு துளி நீராகி விடு" என்கிறார்.... புத்தர்...

அன்புக்குள் அன்பாகி விடுதலே காதல்....

கடக்க கடக்க
அங்கேயே நிற்கிறது
இந்தக் காதல்...

வலைப் பின்னல்களால்
கணக்கிட முடியாத
மீன்களாய் கடல்
சமைக்கிறது....

அத்து மீறியும்
தொடமுடியாத பக்கத்தில்
அச்சடித்த கண்களுடன்
சிரிக்கிறது....

கால்சுருக்கி, தலைசுருக்கி,
இதயம் மட்டும்
துடிக்கும் கருவைப்போல
எனக்குள் என்னையே
சுருட்டுகிறது....

கறிவேப்பிலை பழங்கள்
போல
கருஞ்சிவப்பு கூட்டுக்குள்
மருதாணி முரண்பாட்டை
கொத்தாய் பிடுங்குகிறது....

யாரோ நடந்த
ஒற்றையடியில் அழிக்க
முடியாத பாதங்களாய்
கற்பனை விரிக்கிறது....

சொல்லிவிட முடியாத
தருணத்துக்குள் சொல்லிக்
கொண்டே பேதலித்துக்
கிடக்கிறது
கடக்கவே முடியாத
இந்தக் காதல்....

யுகங்கள் தாண்டியும் சிறகடிக்கும் காதலைப் போற்றுவோம்... மீண்டும் சொல்ல ஒன்றுமே இல்லை.. காதலைத் தவிர...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (28-Mar-15, 4:01 pm)
பார்வை : 430

சிறந்த கட்டுரைகள்

மேலே