நீயில்லாத பொழுதுகள் =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

பிரபஞ்சபெருவெளியெங்கும்
பித்துப்பிடித்துச் சுற்றித்திரிந்திடும்
ஏதோவொரு துகளின் ஈர்ப்பினைப்போல்
உன் விழியீர்ப்புகளின் அசைவுகளில்
உணர்விழந்து சுழலுகிறேன்
உன்னையே மறுபடி... மறுபடி...

மகரந்தம் தூவிச்செல்லும்
மலர்தாவும் மதுவுண்ட வண்டுகளாய்
மதிமறந்து பாடித்திரிகிறேன்
மங்கையுன் மலர்கொண்ட
மங்காத தேகத்தின் ஒளிச்சுவடுகளை
மறுமுறையும் காண்கையில்...

உன்மேனி பட்டுத் தெறித்துவிழும்
உன்னத நீர்த்திவளைகளாய்
உருமாறி கணநேரமுயிர்தாங்கி
உடைந்து நொறுங்குகிறேன்
உருமாறும் உன் உருவங்களின்
உயிருசுப்பும் போதையால் ...

உன்னாடையின் வாசம்சுமந்து
உறவாடவரும் காற்றுக்கும்
உயிர்ப்பிக்கும் உணர்வுகளை
கற்றுத்தந்த கள்ளி நீயெனில்
கட்டாயம் காற்றுக்குமினி
கணநேரம் காதல்வரும் ...

சிறு பறவைக்கூட்டத்தின்
சிறகுகளைப் பற்றிக்கொண்டு
நெடுந்தூரம் பறந்து நீசுவாசித்த
நெடுங்காற்றின் துளிகளைத்தேடி
நெஞ்சமறந்ததைக்கண்டு
கரம்குவித்து கணநேரம்
தடுமாறி தரைநோக்கி வீழ்கிறேன்
திரிசங்கு சொர்க்கத்தில் ...!

நீயில்லாத பொழுதுகளைத் தேடித்தேடி
நீக்கமற நிகழ்வெங்கிலும்
நீ உறைந்திருப்பதை உணராது
எப்பொருளை நான் காண்கையிலும்
அப்பொருள் யாவிலும் உனைக்கண்டும்
உணர்வறுநிலையில் உனையுணர்ந்து
உடல்களைந்து உனைச்சேர்கிறேன்
உடல்மாறும் உயிர்களாய்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (29-Mar-15, 8:10 am)
பார்வை : 327

மேலே