உழைத்து சாப்பிட்டால் என்ன

அய்யா! தர்மம் பண்ணுங்க அய்யா
குரலை கேட்டதும் வெளியே வந்தான் வேலன்
உடம்பில் குறை ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் அவன் முன் நிற்க
கோபம் வந்தது அவனுக்கு

"ஏனப்பா. உடம்பு நன்றாய் தானே இருக்கிறது
உழைத்து சாப்பிட்டால் என்ன?"
கேள்வியில் காட்டினான் அவன் எரிச்சல் கலந்த கோபத்தை

கண் தெரியாத குருடன் அய்யா
தன் நிலையை எடுத்துரைக்க
வாய் திறந்தான் பிச்சைக்காரன்

“பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை
காசு எல்லாம் இல்லை.. போ...”
கடுமையாய் சொல்லிவிட்டு உள்ளே அவன் போக நினைக்கையில்

"என்னங்க எங்கப்பாவிடம் வண்டி வேண்டும்னு சொன்னீங்களே
கடையில் சொல்லிட்டாராம்.. உங்களிடம் பேசணும்னு சொல்றார்"
என்றபடி கையில் கைபேசியோடு வந்தாள் அவன் மனைவி

இதை கேட்டபடி நின்றிருந்த பிச்சைக்காரன்
மெலிதாய் உதிர்த்த புன்னகையில்
மௌனமாய் கேட்டு விட்டான் வேலனிடம்
"உடம்பு நன்றாய் தானே இருக்கிறது.. உழைத்து சாப்பிட்டால் என்ன?" என்ற கேள்வியை...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (30-Mar-15, 12:05 am)
பார்வை : 69

மேலே