என் ஈழத்தோழனின் கண்ணீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து
உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான்.
வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது.

நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில்
மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது.
நிம்மதி மறந்தது ஈழம்
அடிமை வாழ்வை துறந்தான் தோழன்.

படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல்
பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது.
இரவின் பகலின் சுழற்சி
இடறில்லாத விடியலை தேடியது.

அன்று பூத்த மங்கையின் கனவு
கற்பு சூரையாடப்பட்டு களவானது.
பெண்மை விளையாட்டு பொருளாகினால்
அவள் உடம்பு காமன்களின் திடலானது.

பால்வாடை மாறாத பிஞ்சு
ஈன்றாளின் துப்பாக்கி பதிந்த
மார்பில் வாய்வைத்து பசியாறியது
தெருவில் அகதிக்கூட்டம் பெருகியது.

கந்தகக்காற்றில் உயிரை விட்டவன்
கல்லறை சென்றான்.
காணாமல் போனவனை முறையிடச்
சென்றவன் தொலைந்து போனான்.

இறந்தவன் சென்ற முகவரி தெரியாது.
காணாமல் போனவனுக்கு முகவரியே
-கிடையாது.

ஈழத்தின் நிகழ்காலம் இப்படியானது
வருங்காலத்தில் தோழனின்
கண்ணீர் கடல் வற்றுமா?
மனதின் காயம் ஆறுமா?
உரிமைகள் கிடைக்குமா?

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (30-Mar-15, 12:38 am)
பார்வை : 222

மேலே