உண்டியல் பணம்
தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.
அவரின் திட்டம் அப்படியே நடந்தது.
திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.
மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.
மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.
மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.
"இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.
"இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்.
"அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்.
"அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.