என்னை விட்டு போகாதே பகுதி 12

“இத்தனை வருடங்கள் உன் வாழ்வில் இல்லாத நான் இப்போது திரும்பி வந்ததன் காரணம் என்ன என்ற கேள்வி உன்னில் இருப்பது உண்மை தானே. அந்த காரணத்தை சொல்லவே அழைக்கிறேன். நாளை நேரில் பேசுவோம்” சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தாள்.
காரணத்தை சொல்ல போகிறாளா? என்ன சொல்வாளோ? அதுவும் நாளை சந்திக்க வேண்டும் என்கிறாளே. ஏன் நாளை? சிந்தனையில் ஆழ்ந்தவனின் நினைவிற்கு வந்தது நாளைய நாள் தான் அவனது இத்தனை குழப்பமான வாழ்க்கைகான ஆரம்பம் என்று. மறுநாள் அவனது பிறந்த நாள்.
பிறந்த நாள். இந்த நாளை அவன் விரும்பியதில்லை கவியரசி அவன் வாழ்வில் வரும் முன்பு வரை. அவள் தான் அந்த நாளை அவன் ரசிக்க, அந்த நாளுக்காக அவன் ஏங்கி காத்திருக்க காரணம். நான்கு வருடங்களாய் பிறந்த நாள் அன்று இரவு பதினொன்றரை மணிக்கே அழைத்து விடுவாள் அவள். அரை மணி நேரம் பேசியபடி இருந்துவிட்டு பனிரெண்டு மணிக்கு தன் வாழ்த்துக்களை சொல்வாள்.
வேறு எவரும் தனக்கு முன் அவனை வாழ்த்திட கூடாது என்பதற்காக அவள் செய்யும் வேலை இது. வேடிக்கையாக தெரியலாம் ஆனால் அவன் மீது அவள் கொண்டிருந்த அளவிலாத அன்பின் வெளிப்பாடாக தான் அவனுக்கு தெரிந்தது அது.
அப்படி அவன் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நாளை தான் அவன் இப்போது மறந்து இருக்கிறான். காரணம் அவன் வாழ்வில் சமீப காலமாய் ஏற்பட்ட குழப்பங்கள். எப்படியும் அவள் அவனை அழைப்பாள் என்று அவனுக்கு தெரியும். அதனால் உறங்கிட கூடாது என்று எண்ணி நேரத்தை கடத்தினான்.
புத்தகம் படிக்கலாம் என்றெண்ணி தான் அலமாரியை திறந்தவன் கண்ணில் பட்டது அவனது டைரி. அவன் எழுதிய கவிதைகள் அனைத்தும் அதில் தான் உறங்கி கொண்டிருந்திருந்தது அமைதியாக. அவனது உறக்கமற்ற இரவுக்காக அந்த கவிதைகளின் உறக்கத்தை கெடுக்க முடிவு செய்தான் அவன்.
அவனது கவிதைகள் ஒரு கவிஞனாக அவனது வளர்ச்சியை பிரதிபலித்தது. அவனது அந்த வளர்ச்சிக்கு துணை நின்றது கவியரசி அவனுக்கு அளித்த ஊக்கம். அவள் அளித்த அந்த ஊக்கம் கூட அவனை அவளை நோக்கி இழுத்தது எனலாம். எந்த ஒரு கலைஞனும் தன் படைப்பை ரசிக்கின்ற பெண்ணை தானே வாழ்க்கை துணையாக பெற விரும்புவான்.
வாசித்து கொண்டிருந்தவன் கண்ணில் பட்டது அவளை எண்ணி அவன் எழுதிய கவிதை,
“பெண்ணே!
உறக்கமற்ற என் இரவுகளுக்கான காரணம்
நீ உறங்கும் போது மட்டுமே அமைதியாய் இருக்கும்
உனது விழிகள்”.
எத்தனை அழகான உண்மை அது. புன்னகைத்தான் அவன். பனிரெண்டு மணி ஆகவே அவனது கைபேசி ஒலித்தது. அதை கையில் எடுத்தான் அவன்.
மருத்துவமனையில் இருப்பதால் இருக்கலாம் இந்த தாமதம் என்றெண்ணியவன் கண்ணில் பட்டது கவியரசி அழைப்பதாய் காட்டிய கைப்பேசியின் திரை. அழைப்பை ஏற்றான்.
“என் ஆருயிர் தோழனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் உன் வாழ்வில் இன்பம் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்” அழைப்பை ஏற்ற அடுத்த நொடியிலேயே சொன்னாள் அவள்.
“நன்றி சொல்லிட விருப்பம் இல்லை. நீ என்னோடு இருந்தால் என் வாழ்க்கை முழுவதும் இன்பம் தான் கவி” நெகிழ்ச்சியில் தழுதழுத்தது அவனது குரல்.
“நான் இல்லாமல் வேறு யார் உன்னோடு இருக்க போகிறார்கள். சரி நான் தானே முதலில் வாழ்த்தியது. அம்மா இங்கு என்னுடனேயே தங்கி விட்டார்கள். இப்போது தான் உறங்கினார்கள். அது தான் இந்த தாமதம். எனக்கு முன் வேறு எவரும் உன்னை வாழ்த்திடவில்லையே?” ஒரு குழந்தையை போல கேட்டாள் அவள்.
“இல்லை இல்லை. வேறு எவர் அழைத்திருந்தாலும் நான் அழைப்பை ஏற்றிருக்க மாட்டேன். மஹா ராணியின் உத்தரவு அல்லவா அது.” சொல்லிவிட்டு சிரித்தான் அவன்.
“இன்று உன்னிடம் முக்கியமான ஒன்றை சொல்ல வேண்டும். வெகு நாட்களாய் நான் சொல்ல எண்ணிய ஒன்று. அம்மாவையும் அப்பாவையும் இரயில் ஏற்றிவிட்டு இங்கு வருகிறாயா?” கேட்டாள் அவள்.
“வருகிறேன். ஆனால் எதை பற்றி என்றாவது சொல்ல கூடாதா?”. அவன் மனம் ஏங்குவதை தான் அவள் சொல்ல போகிறாளா என்ற எதிர்பார்ப்போடு கேட்டான் அவன்.