என்னை விட்டு போகாதே பகுதி 11

அவன் அவளது கோபத்தை தனிப்பதற்குள் அவனது கைபேசி மீண்டும் சிணுங்கியது. அழைத்தது சாரு தான். அவள் அவனை முறைத்தாள். அழைப்பை ஏற்றவன் அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு வேக வேகமாக பேசினான். ஆனால் பேச்சு தொடரவே அந்த இடத்தை விட்டு விலகி சென்று பேசினான்.
அவன் பேசுகையில் அவனது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்த சப்தம் கேட்டது. பேசி முடித்து விட்டு அதனை படித்தான். “நான் உன்னை வெறுக்கிறேன்”. அனுப்பியது கவியரசி.
காதலிக்கிறேன் என்று இருந்திருக்கலாம். புன்னகைத்த வண்ணம் அவள் இருந்த திசை பக்கம் திரும்பினான். அங்கே அவனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் அவள்.
நினைவில் ஆழ்ந்து போயிருந்த அவனை மீட்கும் ஒலியாய் மாறி போனது அவனது கைப்பேசியின் அழைப்பொலி. அழைத்தது கவியரசி தான். அழைப்பை ஏற்றான்.
“அப்பாவும் அம்மாவும் நாளை காலை ஊருக்கு கிளம்புகிறார்கள். அதிகாலையில் வந்து அவர்கள் இரயில் நிலையம் செல்ல உதவி செய்ய முடியுமா?” கேட்டாள் அவள்.
“முடியுமா என்று கேட்கிறாயே. செய் என்று சொல் கவி” உரிமையாய் சொன்னான் அவன்.
“நீ இதை தான் சொல்வாய் என்று எனக்கு தெரியும்” புன்னகைத்தாள் அவள். “சரி அதிகாலை வந்துவிடு” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
அதிகாலையில் விரைவாய் எழுந்திட வேண்டும் என்பதால் தன் கடந்த கால நினைவுகளை நிறுத்தி கொண்டு பூங்காவை விட்டு கிளம்பினான் அவன். அவனது கைபேசி மீண்டும் ஒலித்தது. “இவள் இப்படி தான். மீண்டும் மீண்டும் பேசிட வேண்டும்” என்று சொல்லியபடி கைப்பேசியை எடுத்தவன் எதிர்பார்த்தபடி அழைத்தது கவியரசி அல்ல தேவி.
இன்பமாய் இருந்த அவனது மனம் மீண்டும் ஏதோ குழப்பத்தால் வாடியது. அழைப்பை ஏற்றான். “வேலை எல்லாம் முடிந்து விட்டதா? இப்பொழுது பேசலாமா?” என்றாள் அவள்.
இனி பேசுவதற்கு என்ன உள்ளது நமக்குள். இந்த பெண்கள் எப்போதும் புதிரானவர்கள் தானோ. அவர்களது இருத்தலும் இல்லாமையும் கணிக்க முடியாதவை,அவர்களின் மனதை போலவே. தனக்குள் சொல்லிக்கொண்டவன் “சொல் கவி” என்றான்.
“கவியா? யார் அது” கேட்டாள் அவள்.
“இல் …லை … தேவி ... சொல் … “ என்றான் அவன் தவறுதலாய் சொன்ன தன் உதடுகளை கடிந்தபடி. அவற்றை கடிந்து என்ன லாபம். அவைகளுக்கு கூட கவி என்ற பெயரை தான், அவளை தான் பிடித்திருக்கிறது போலும், சொன்னது அவன் மனம்.
யார் அந்த கவியரசி? இந்த கேள்வி மட்டுமே தேவியின் மனதில் சில நொடிகள் ஓடி கொண்டிருந்தது. பேச மறந்து அதையே சிந்தித்து கொண்டிருந்தாள் மௌனமாக.
“என்ன தேவி? எதை பற்றி பேசுவதற்காக அழைத்தாய்?” அவனது இந்த கேள்வி அவளை நினைவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.
“உன்னிடம் நிறைய பேசிட வேண்டும். நாளை காலை சந்திக்கலாமா?” கேட்டாள் அவள்.
“நாளை காலையா?” கவியரசி சொன்னது அவன் நினைவில் தோன்றி மறைய “ இல்லை தேவி. நாளை காலை எனக்கு முக்கியமான வேலை ஒன்று உள்ளது. என்ன பேச வேண்டும். இப்போதே சொல்” என்றான்.
“இல்லை அழைபேசியில் பேசிட விருப்பம் இல்லை எனக்கு. நாளை மாலையாவது சந்திக்க முடியுமா?” விடுவதாக இல்லை அவள்.
“சரி ..எங்கே வர வேண்டும்?” சற்றே நிலை இல்லாமல் கேட்டான் அவன்.
“வழக்கமாய் நீ வருகின்ற அந்த பூங்காவில். 6 மணிக்கு சந்திப்போமா?” சொன்னவளின் குரலில் எதிர்பார்ப்பு தெரிந்தது.
“சரி. வருகிறேன். எதை பற்றி என்றாவது சொல்?” அவன் மனதின் சந்தேகத்தை கேள்வி ஆக்கினான்.