காதல் பருகும் நாள் -ரகு
அவ்வியக்கங்களில் புதிதாகிறேன் நான்
முற்றிலும் புதிது அவ்வியக்கங்களும்
இப்படிக்கு நம் சந்திப்பு
மழைக்கு ஏங்குவதைத் தவிர்த்து
நண்பகல் ரசித்து நடமாடுகிறேன்
கரையான்கள் களைந்து
ஏறுக்கு ஒப்பாத வெண்ணிற
வர்ணம் பூசி வளையச் சுமக்கிறேன்
வறண்ட என் தரிசலில் ஒரு
கத்தரியை உயிர்ப்பிக்கத் துணிந்ததும்
சிறுத்துவிட்டது இவ்வுலகு
வற்றிய என் கிணற்றடிக்கு
நீ வந்தபோது உயிர்த்திருக்கும் சிறு ஊற்று
நம்பிக்கையில் சரூராகத் தூர்வாரும் பணி
வரப்புமேட்டில்
நிலவொளி உதிர உதிர
தவமேற்க்கொள்கிறது என்னோடு
உன் வர்ணனைக் கவிதையும்
காதல் பருகும் நாள்
சற்றே நிதானிக்கட்டும்
செவ்விதழ் தேங்கிய நீர்த்துளியாகவே
காத்திருத்தல் சுகம்
இப்போதைக்கு வேண்டும்
ஒரு பசுமை என் நிலத்திலும்
நம் பருவத்திலும்