தண்ணீர் தெளிக்கிறேன்

கவி வார்த்தைகளால்
அருளுரை வழங்கல் ,
நட்சத்திர வரிகளால்
நிழல் நக்கிக் காட்டல் ,
நிறை வாசிப்புக்கொண்டவர்களை
புகழுரைத்தல்,
எழுத்து ஸ்துதிபாடுதல் ,
கவிதைகளின் பொய்த் திறன்
வியத்தல் ,
காதலின் பெருங்கதைகள் புனைதல்
கவி பரப்பி விற்றலில்
லாபமடைதல் இவையேதுமின்றி
யதார்த்த மணம் வீசும்
எனது சந்தனத்தை
உங்களால் நுகர முடியாது -
ஏனெனில்
நுகர்ச்சியின் பெரும்புழு அரிப்பில்
உமது நாசி
தூர்ந்து போயிருப்பதால்
நீவிர்
நுகர்வதாய் பொய் பகர்ந்து
திரிகிறீர்கள் ....

ஐயமும் அதிருப்தியும்
குழைத்து நீங்கள்
தீட்டும் போது மட்டும்
உயர்ந்திருந்த
என் கவிதையின் தலையை
கண் திருஷ்டி காய்க்கு
கேட்டு வாங்கிய பின்
நிறைவு பெற்றிருந்த
என் கவிதைகளால்
வாசிப்பற்ற
பெட்டியில்
சேகரித்துச் செல்கிறேன்
உங்களின் அலட்சியங்களை ....

தராசும் எடைக்கல்லும்
இருக்கிறதென்பதற்காக
எதைவேண்டுமானாலும்
எடை போடுமுங்களின்
தராசையும் எடைக்கல்லையும்
எப்போதாவது சரிபார்த்ததுண்டா ?

ஆவதனைத்தும் ஆய்ந்து
தெளிந்த புத்தன் பகிர்ந்தளித்த
ஆசையழிப்பிலிருந்து
ஊறிப் பெருகும் கருணைக்குப்
பதிலாய்க் கிடைத்த
இழிவின் வாசனை
தெரியாமல் பூசித் திரியும்
சகிப்புணர்வின் கழுத்தில் மாலையிட்டு
சினந்த புத்தனின்
சந்நிதிக்கு இழுத்து வந்து
தலையில் தண்ணீர் தெளிக்கிறேன் !
பிழைத்துப் போங்கள்........

எழுதியவர் : பாலா (5-Apr-15, 7:49 pm)
சேர்த்தது : lambaadi
பார்வை : 116

மேலே