மண் வாசம் மறைந்த மறவன்பட்டி
ஓடித் திரிந்த பாதையெல்லாம்
ஓடைப் பூக்கள் வாசம்..
கூடிப் பறந்த வீதியெல்லாம்
கூடைப் பூக்கள் வீசும்..
சாணி படர்ந்த திண்ணையெல்லாம்
அப்பத்தா நேசம்..
கோலம் இட்ட வாசலெல்லாம்
கதிரவன் கண் கூசும்..
அட எங்க ஊரு கதையெல்லாம்
இலதலைங்க கூட பேசும்..
பள்ளி முடிந்த நாளில்
பட்டம் சுமக்க தோளில்
என் பயணமோ
நகரம் நகரும் இரயிலில்..
சொர்கத்தில் சோறுண்ட எனக்கு
நரகத்தில் நாள் கடத்த முடியவில்லை
இருந்தாலும் வேறு வழியுமில்லை..
விட்டுவைத்து விளக்கெண்ணை
பற்றவைத்த விளக்கில்
எண்ணெய் காய்ந்து
எரியும் திரியும்
கருகிப் போவது போல்..
இன்று...
நான் விட்டு வந்த
சொர்க்க பூமியோ
மழையின்றி
மங்கிப் போனது..
வளமின்றி
வறண்டும் போனது..
விவசாயம் விட்டு
வேறு தொழில் தொட்டு
காலம் ஓட்டும்
என் சொந்தங்கள் மத்தியில்..
அன்னாந்து பார்த்தபடி
தினந்தினம் திரிந்து வரும்
என் அப்பத்தாவின் பாதங்கள்..
அவளின் ஊர்...
மழைக்காக மன ஆசை நிறைந்த
"மண் வாசம் மறைந்த மறவன்பட்டி"...
செ.மணி