நாக்கு கூசுகிறது- Mano Red
பரந்துவிரிந்த
பரம்பரையின்
விலை மதிப்பில்லா
வித்துக்கள் சுமக்கும்
வாரிசுகள் அவர்கள்..!!
தீர்ந்துபோன பின்னே
தெருவில் வீசலாம்,
ஆனால்
இளமை தீரும் முன்னே
வெட்டி வீசப்பட்ட
அஹிம்சாவாதிகள் அவர்கள்..!!
மிருகமென எவர்
வந்தாலும் போனாலும்
நிறைகுறை ஏதுமின்றி
இன்னும் மென்மை உமிழும்
அழகியல் அவர்கள்..!!
ஆயிரமாயிரங்காலமாய்
அனுபவித்து விட்டு,
நன்றி மறந்த
அழுக்கேறிய மனிதனுக்கும்
பச்சை மனம் திறக்கும்
பாசக்காரர்கள் அவர்கள்..!!
அது இது என
ஒருமையில் சொல்ல
ஒன்றுமில்லாதவர்கள்
அல்ல அவர்கள்..!!
உயிர் முடிச்சை
காற்றின் கயிற்றால்
கட்டிப்போட்ட
மரங்கள் தான் அவர்கள்..!!
நாக்கு கூசுகிறது,
இருக்கிற
மரங்களையெல்லாம்
வெட்டி வீழ்த்திவிட்டு
மனிதா உன்னால்
எப்படி முடிகிறதோ
வீட்டுத்தொட்டியில்
செடி வளர்க்க...??