வர்ணத்தை வரைந்து வைத்தது யாரடி - தேன்மொழியன்

வர்ணத்தை வரைந்து வைத்தது யாரடி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேகத்தின் தேகம் உடைந்து
சிதறிய சின்னஞ்சிறு மழைத்துளியும் ....
--அத்துளி மோதிய சன்னல் கண்ணாடியின்
--மேனியை உரசி வழியும் நீரிலும்

உனது முகத்தின் எழிலை எழுதி வைத்தது யாரடி ..!

தூரத்தில் அசையும் மரத்தை
அப்படியே நகர்த்தி அதன் உச்சியிலும் .....
--இக்காட்சியினைக் கண்ட என்விழியை
--மெதுவாய் கீறிய முள்ளின் நுனியிலும்

உனது கூந்தலின் நீளத்தை அளந்து வைத்தது யாரடி ..!

நகர்ந்துச் செல்லும் நகரப் பேருந்தை
விரட்டிய விரைவு பேருந்தின் ஒலியிலும் ....
--அழகாய் வீழ்ந்த தூரலை இரசித்த
--சிறுமியை மிரட்டிய இடியின் குரலிலும்

உனது கொலுசின் இசையை மீட்டி வைத்தது யாரடி ..!

விரைந்த மென்பாதங்கள் விரும்பி தெறிக்க
என்னுடையை நனைத்தச் சேற்றின் சிரிப்பிலும்
--ஓய்ந்து அடங்கிய அடைமழைக்கு வானமே
--காதல் சொல்லும் வானவில்லின் இதழிலும்

உனது தாவணி வர்ணத்தை வரைந்து வைத்தது யாரடி ..!

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (8-Apr-15, 1:10 pm)
பார்வை : 97

மேலே