நான் தமிழன்

நான் தமிழன்
எனவே என்னை
எவன் வேண்டுமானாலும்
எங்கு வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும்
சுட்டுக் கொல்லலாம் !
வந்தாரையெல்லாம்
வரவேற்று வரவேற்று
வாழ வைக்கும்
இளிச்சவாய்த் தமிழன் நான்
எனவே
வாழ வழித் தேடிப்போகிற
இடங்களிலெல்லாம்
எவன் வேண்டுமானாலும்
என்னைக் கொல்லலாம் !
திரைகடலோடி
திரவியம் தேடுகிறவன்
ஆனாலும்
சொந்த நாட்டிலேயே
ஒருவாய் சோற்றிற்காக
முப்புறமும் நீர் கேட்டு
மண்டியிடும்
மானம் கேட்ட தமிழன் நான் -
எனவே
எவன் வேண்டுமானாலும்
என் குலமழிக்கலாம் !
வெண்கலச் சிறகிருந்தும்
மழைகாலங்களில்
மட்டுமே
பறக்கும் புற்றீசல் நான் -
எனவே
எந்தக் கள்ளப்பருந்தும்
என்னைக் கொத்திக் குதறலாம் !
இறந்தகாலப் பெருமை
பேசிப் பேசியே
நிகழ்காலத்தில்
பிணமெனக் கிடக்கும்
இழிகுலம் நான்
எனவே
எவனுமென் அனுமதியின்றி
என்னைக் குழிதோண்டிப்
புதைக்கலாம் !
வயிற்றுப் பிழைப்புக்காக
உப்பு நீரில்
உயிர் பயணம் செய்து
மீன் பிடிக்கும்
நான் தமிழனென்பதால்
என்னை எல்லைதாண்டியதாகச் சொல்லி
எவன் வேண்டுமானாலும்
என்னை சுட்டுத் தள்ளலாம் !
உச்ச நீதி மன்றமோ
சொச்ச நீதி மன்றமோ
எம் மன்றத்தின்
தீர்ப்பும் எனக்குப்
பயன்படாது
ஏனெனில்
ஓரவஞ்சனையால் ஒதுக்கப்பட்ட
உதவாக்கரை தமிழன் நான் !
எனக்குத் தேசிய நீரோட்டம்
முக்கியம்
ஆனால் அதே
தேசிய நீரோட்டம்
தவித்த என் நாக்கு நனைக்கா தெனில்
நீதி எதற்கு
நாடெதற்கு
சகோதரத்துவம் எதற்கு ?
மானைக் கொன்றால்
கூட
பதறுகிற இப்பாரதத்தில்
சொந்த அண்டை மாநில
சகோதரைனையே
நாயினும் கேவலமாய்
இதே தேசிய நீரோட்டம்
சுட்டுக் கொல்லுமெனில்
நான்
............கேட்ட தமிழன் தானே ?