நீண்ட மரணம்

மரணிப்பவருக்கு
மட்டும் தெரிவதேயில்லை
தன் மரணம்....
அது சூட்சுமங்களின்
குறியீடு...
வந்து போகும்
தூரத்தின் குறுக்கு வழி..
அல்லது வழி
மறந்து
விட்ட ஒரு ஞாபகம் ..
எழுதி தீர முடியாத
பாடி ஓய முடியாத
ஒரு தீ சுடர்..
அணைவது போல
காணும்
மாயங்களின் சூழ்ச்சி...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையில்
திக் என்ற நீண்ட வளைவு...
தினம் தன்னை
மாற்றிக் கொண்டே இருக்கும்
காலத்தின் சுழலில்
குழல் மறந்த துளையாகிறது
மூங்கில் அற்ற காடு....
தோட்டாக்களின்
விழிகளுக்கு ஒரு போதும்
தெரியாது
ரொட்டித் துண்டின்
வயிறும்
பாடுகளின் பாட்டும்
ஏடுகளின் தீட்டும்...
எல்லாம் சரியாகும்
நாளில் நானும்
இருக்க போவதில்லை..
ஸ்தம்பித்த பொந்திடைக்குள்
நான் என்ன வகை
இருளென
சிறகு குறுக்குகிறது
எனது இன்றைய மனம்...
மனங்களால் வாழ்வதில்
மூளை செத்தும் போகிறது....
மரணங்கள் சொல்வது
துயரம் மட்டும் அல்ல.......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Apr-15, 10:59 am)
Tanglish : neenda maranam
பார்வை : 1207

மேலே