கொஞ்சம் நில்லுங்கள் -கார்த்திகா

விடிகாலை நான்கு மணிக்கே
எழுந்து பூக்களை
மலர வைத்து
கடை விரிக்கிறாள் பாட்டி
ஒரு புன்னகை வாங்குங்கள் ...
விலையேதுமில்லை !
எப்படியும் பூச்சரங்களை வாழ
வைத்துவிடுவாள் ...

ரோஜாக்கள் தூவ வேண்டாம்
நடு ரோட்டில் நர்த்தன விநாயகர்
கொஞ்சம் வாழ்த்துக்களேனும்!

யாரும் நின்று கேட்கவில்லை
இருப்பினும் தேன்குரல் நிற்கவில்லை
நல்லவேளை கண்களை
தானமிட்டு விட்டாள்
அவள் பிறப்பிலேயே!

கட்டிய கூறுகளைத் தொட்டால்
குற்றமென்று வெறும் கஞ்சி
தொண்டை நனைக்கிறது ..
சாலையை அலங்கரிக்கிறாள்
காப்பு காய்த்த கரங்களினால் !

புரையோடிய விழிகள்
தொட்டு வழிந்திட்ட
வியர்வையைத் துடைக்கவோ
பசி பற்றிய வயிறை அணைக்கவோ
நேரமின்றி வண்டி இழுக்கும் பெரியவர்
கருணை தேவையில்லை
கை கொடுங்கள் ..

ஒழுகுகின்ற பாத்திரம் அறியாமல்
சமைத்திடும் சிறுமியே,
சிதறவிட்ட அரிசிகளில்
பிழைத்தெழுந்த
எறும்புக்குடும்பங்களை பாரடி நீ !

கொட்டை அரிசி சோற்றை
மெல்லுவதற்கு பற்கள் இன்றி
ஈறுகளில் சிக்கித் தவிக்கும்
சிறு குழந்தை ...
என் பசி மரத்துப் போகும்
இன்னும் பல தினங்களுக்கு!!

எழுதியவர் : கார்த்திகா AK (9-Apr-15, 1:59 pm)
பார்வை : 575

மேலே