குமுறல் சத்தம்
குமுறல் சத்தம் !!!!
அடியேபுள்ள கருப்பாயி
அறுப்பறுக்கப் போறவளே
பச்சப்புள்ள சேலையிலே
பதறுவதை பாக்கலையா
மரகிளையில் யானைகட்டி
மகராசனை தூங்கவச்சி
புள்ளையவன் தூங்கியதும்
புறப்பட்டேன் அறுப்பறுக்க
பாதியில முழிச்சபுள்ள
பயந்துபோய் அழரானோ
பால்நெனப்பு வந்ததுவோ
பாழும்வயிறு நெறையலையோ
பச்சஉடம்பு மாறலையே
பாவிமவ ஏன்டிவந்த
இன்னுங்கொஞ்ச நாளைக்குதான்
இருந்துவிட்டு வந்தாலென்ன
எனக்குவாய்ச்ச எம்புருசன்
எங்கிறிக்கான் தெரியலையே
என்னொடம்ப நாம்பாத்தா
என்னாகும் சொல்லாத்தா
அப்பனாத்தா இருக்கையிலே
அடுக்குமாடி இந்தகதி
பச்சபுள்ள கதறுதேடி
பாழுவயிறு பதறுதேடி
ஆழாக்கு கம்புயில்ல
கூழாக்கி குடிப்பதற்கு
ஏழைமவ எனக்குவாய்ச்ச
எதுவுமே சரியில்லாத்தா
போனவருசம் பொங்கலுக்கு
போட்டிரிந்த ஒத்தகல்லும்
வட்டிகடைக்கு போயாச்சு
வச்சநக மூழ்கிப்போச்சி
பள்ளிக்கூடம் போரபுள்ள
பாவாடை கிழிஞ்சிரிச்சி
தச்சயிடம் நஞ்சுப்போச்சி
தைக்கயினி எடமில்லாத்தா
புள்ளநல்லா படிக்கிறான்னு
பள்ளிக்கூட வாத்திசொன்னார்
அரசுப்பணம் வருதாக
ஆதாரட்டை வாங்கசொன்னார்
ஆறுமாசம் அலைஞ்சபின்னும்
ஆபீசருங்க மறுத்துட்டாங்க
அலுத்துப்போன நானுமதை
அடியோடு வுட்டுட்டாத்தா
எண்ணக்கிணறு வேலையின்னு
ஏரோப்ளேன் ஏறிப்போனான்
என்னப்பாடு படறானோ
என்னிநானும் தூங்கலாத்தா
எம்பொழப்பு என்னோட
ஏழைநானும் என்னசெய்ய
ஏங்கிதவிச்சி இருக்கோணும்
எம்புருசன் வரவரைக்கும்
….
….
எந்த இடத்தில் முடிப்பதென்று
எனக்கும்கூட தெரியவில்லை
எம்மக்கள் படும்பாட்டை
எடுத்துரைக்க தொடங்கிவிட்டால்
உங்களிடமே விட்டுவிட்டேன் - இனி
உங்கள்பாடு சொல்லிப்புட்டேன்
சனநாயக நாட்டுலத்தான் - நம்ம
சனம்வாழ வழிவகுப்போம்
உங்களுடன் சகப்பயணி ...
பார்த்திபன்.ப
18/03/2015