வார இறுதி
நகரத்தை
நாள் முழுதும்
வறுத்தெடுத்து
வியர்த்துவிட்ட சூரியன்
மேகத்துண்டணிந்து
மாலை குளியலுக்காய்
மேலைக்கடலுக்குள்
மூழ்கி விட்டான் !
வார இறுதி
விடுமுறைக்குக்
காத்திருந்த மாநகரம்
சுறுசுறுப்பாய் இயங்கியது
நாளையின் சோம்பலைக் கொண்டாட !
குத்தகைக் காரன்
எச்சில் தொட்டு
எண்ணித்தரும்
நோட்டுக்களை -
கல்லும் கம்பியும் ஏற்றி
கழும்பெடுத்த கைகளால்
தடவிப் பார்த்து டாஸ்மாக்
கனவுகள் கண்டனர்
கட்டிடத் தொழிலாளர் !
மிஞ்சிய கூலி
போதாமல் கடன் சொல்லி
அரிசியும் உப்பும் வாங்கி
அலுமினியபாத்திரத்தில்
கஞ்சி பொங்க ஓடிவரும்
தாயின் வரவை காத்திருக்கும்
குடிசைவாழ் குழந்தைகள் !
இறக்குமதி
நுகர்பொருட்களுக்கு
குளுகுளு வளாகங்களில்
வரிசையில் நின்று
உரசப் பட்டன
கலர்கலராய்
கடன் அட்டைகள் !
தொலைக்காட்சி முன்
அம்மா உட்கார நேரம்
பார்த்து காத்திருந்தனர்
வீட்டு பாடம் எழுதுவதை
தள்ளிவைத்த சிறுவர்கள்!
மருத்துவர் கூற்றுப்படி
மாலைநேர நடை முடிந்து
அன்றைய அரசியலின்
செய்தி விவாதங்கள்
பார்த்து ஆதங்கப்பட
ரிமோட் கிடைக்காமல்
காத்திருக்கும் மத்தியதர
குடும்பத் தலைவர்கள் !
வார இறுதி ஒப்பந்தமாய்
மதுப் புட்டிகள் திறந்தனர்
மேல்தட்டு இளைஞர்கள் !
காலையில்
காதலனுக்கு அனுப்ப
குறுஞ்செய்தி கவிதையை
பதிவிறக்கம் செய்தனர்
கணினி கன்னிகள் !
சலிப்புடன் இறக்கப்படும்
கடைவீதி ஷட்டர்கள் முன்
காரசார சண்டையிட்டனர்
கடைத்திண்ணை கட்டிலுக்காய்
விடியலும் வீடுமற்ற
தெருவோரச் சிறுவர்கள் !
ஓடிச் சலித்த
ஒரு வார இறுதியில்
அலாரத்துக்கும்
விடுமுறை கொடுத்து
கொட்டாவி விடும் மனிதருக்காய்
கனவுக் கோட்டைகளின்
கதவுகளை திறந்து கொடுத்து
இருட்டுபோர்வை போர்த்துக் கொண்டது
இந்தியாவின் ஒரு மாநகரம் !