யுகம் தாண்டும் சிறகுகள்-17-பொள்ளாச்சி அபி

வணக்கம் தோழர்களே..!
யுகம் தாண்டும் சிறகுகள்..பகுதியில் நானும் எழுதுவதற்கு தோழர் கவித்தா சபாபதி வாய்ப்பு அளித்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் அழகான எல்லை மீறலில்..என்று அவர் குறிப்பிட்டிருந்தது கூடுதல் மகிழ்ச்சி. காரணம்,குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் நின்று எழுதுவதென்ற இறுக்கம் தளர்ந்துவிட்டது.அதனால்,சுதந்திரமாகப் பேச எனக்யொரு வாய்ப்பு.

இயல்பாக எழுதத் துவங்கி,இக்கட்டுரை முடிவுற்றபோது,அதனை மூன்றுபாகங்களாகப் பதிவு செய்யவேண்டிய அளவில் இருந்தது.அதனால் என்ன..? எல்லைமீறல் என்பது இங்கு அனுமதிக்கப்பட்டு விட்டபடியால், நானும் எனது சுதந்திரத்தின் எல்லையை சற்று பரவலாக்கிக் கொண்டேன். 17,18,19..என்று மூன்று பகுதிகளைப் பதிவேன்.ஆனால்,கட்டாயம் இதனை நீங்கள் படித்தேஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால், வாசிக்கும் சுதந்திரம் உங்களின் கைகளில் பத்திரமாகத்தான் இருக்கிறது.இது அன்பான எச்சரிக்கைதான்..! இதனையும் கடந்து,கோட்டுக்கு இந்தப் பக்கம் என்றால்..,
---------- --------- --------------
வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்..! அன்புடன் பொள்ளாச்சி அபி.!

“உன் விரல் நுனியிலிருப்பது
வெறும் எழுத்துக்களல்ல.,

உனக்குத் தெரிந்த வார்த்தைகள்
வெறும் கோர்ப்புகளுமல்ல.,

நீ வடிக்கும் வரிகள்
வெற்று வாக்கியங்களுமல்ல.,

உன் கைவசமிருப்பது
உலகை மாற்றிடும்
கவிதைகளென்று காண்..!” ---- பொதுவாகக் கவிதைகளைப் பற்றிய எனது புரிதல் இப்படித்தான் இருக்கிறது.

“நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று”.. என்ற வள்ளுவனின் தீக்குறள் கற்பித்ததை,பாட்டன் பாரதியும்,

“விதையினைத் தெரிந்திடு,
வீரியம் பெருக்கு,
வெடிப்புறப் பேசு,
வேதம் புதிது செய்..”, என்று புதிய ஆத்திச்சூடியில் வலுவேற்றிப் போனான்..!

எதுகையும்,மோனையும்,சந்தமும்,தாளக்கட்டும்,வடிவமும்,வார்ப்பும்,அழகியலும்,அறிவியலும்..என கவிதைகள் எப்படி முகம் காட்டினாலும்,அதன் அகம் என்னவென்று பார்க்கவே துடிப்பதாகப் பழகிவிட்டது.

“தேர்தலெனும்
ஆர்ப்பாட்டமான டெஸ்ட்டில்
அம்பயர்களாக நின்ற
அப்பாவி மக்களே-எப்போதும்
அவுட் ஆகிறார்கள்..!” என்று தேர்தலைப் பற்றிய கவிதையும்,

“இந்தியா ஒரு மியூசியம்
நினைவுச் சின்னங்கள்
நிறைய உண்டு-அதில்
ஒருமைப்பாடும் ஒன்று..”-என்று நாட்டின் நிலை பற்றியும்,

“இருப்பதையெல்லாம்
வரதட்சணையாய் தந்துவிட்ட
பெண்ணின் தந்தையார்
திவாலாகிவிட்டார் என
ஊருக்கு உணர்த்திடும்
மஞ்சள் நோட்டீஸூம் அதுதான்..!” என்ற “திருமண அழைப்பிதழ்” கவிதையும்,

“நாங்கள் பொருட்பாலுக்காக
காமத்துப் பாலை விற்கிறோம்
அதற்காக
அறத்துப்பால் ஏன்
அழுதுவடிகிறது..? என்ற “பரத்தமை” கவிதையும்


“இரவில் வாங்கினோம்
விடியவே இல்லை..என
புதுக்கவிதை சொல்லி
புலம்பித் திரிகிறார்கள்
பாரதம் முழுவதும்
ஊழல்மன்னர்கள்
பரவிக்கிடக்கையில்
பகலில் வாங்கியிருந்தால் மட்டும்
விடிந்துவிடவா போகிறது..?”..என்று சுதந்திரம் குறித்தும்,கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட,இதுபோன்ற இன்னும் பலநூறு கவிதைகள் ஒரு தலைமுறை கடந்தும் வாசகர்களின் மனதை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.காரணம்,இன்னும் தீர்க்கப்படாமல் அல்லது தீர்வு காணமுடியாமல் நிரந்தரமாய் மனிதர்களை இம்சிக்கும் சிக்கல்களைக் குறித்து கவிஞன் தன் கவனத்தில் கொண்டு பாடியவை,எழுதியவை யுகங்களைத் தாண்டி நிற்கும் தகுதிகளை ஏற்கனவே பெற்றுவிட்டன.

மணிக்கொடிக் காலம்,எழுத்துக் காலம்,கசடதபற காலம்,வானம்பாடிக் காலம்..என்று பாரதிக்குப் பின் வளர்ந்த கவிதைகளின் காலம், இப்போது தனக்கு முன் இருந்த கவிஞர்களின் எழுத்துக்களை அனுபவித்துக் கொண்டும், சுவீகரித்துக் கொண்டும் வளர்ந்துவருகிற புதுயுகக் கவிஞர்களின் காலமாக இருக்கிறது.

கவிதைகளின் நிலையும் புதுக்கவிதைகள் என்பதைக் கடந்து நவீனக் கவிதைகள் என்ற அளவில் அளப்பரிய மாற்றங்களையும் பெற்றுவருகிறது.உலகமயமாக்கலும்,தராளமயமாக்கலும் இன்றைக்கு பாடுபொருள்களின் எல்லைகளை விரிவடைய வைத்திருக்கின்றன.

அதேசமயம் மாய்ந்து,மாய்ந்து வார்த்தைகளைக் கோர்த்து,நீள் வரிகளை எழுதுவதும், சொல்லவந்த கருவை,நறுக்கென்று சொல்லாமல்,ஒரேபொருள் தரும் வரிகளை மாற்றிமாற்றிப் பின்னலிட்டு,நெடுங்கவிதைகளை சமைப்பதும்,சந்தங்களின் மயக்கத்தில் கவிஞனும் கட்டுண்டு போவது பழைய பாணியாகிவிட்டது.நெடுங்கவிதைகளை எழுதும்போது,ஒவ்வொரு வரியிலும் புதியவிஷயங்கள் இல்லாவிட்டால்,வாசிப்பவன் விரைவில் சலிப்படைந்து விடுகிறான்.

“பட்டுவேட்டியைப் பற்றிக்
கனாக் கண்டு
கொண்டிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது..!” என்பது போன்ற கவிதைகளின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் இன்றைய கவிஞன், சுதந்திரம் என்ற அதே தலைப்பில்,

“களவாடப்பட்டது கோவணம்
கனவிலென்னவோ
பட்டு வேட்டி..” என்று சுலபமாக்கிவிட்டான்.ஐந்துவரிகளைக் கூட மூன்று வரிகளாக மாற்றிவிடும் யுக்தி இன்றைய கவிஞர்களிடத்தில் உண்டு. காரணம்,மனித வாழ்க்கை இன்றைய சூழலில் எதிலும் வேகம்,எப்போதும் வேகம் என்ற அளவில் தகவமைக்கப்பட்டு விட்டது.அதற்கேற்ற வடிவத்தில் கவிஞனும் தன்னை மாற்றிக் கொள்வதே இயல்பு.

யதார்த்தமான இந்தச் சூழலில்,மரபுக்கவிதைகளில் இருந்து,புதுக்கவிதைகள் என கடந்துவந்த பாதைகளின் இயல்பான மாற்றங்களைக் கணக்கில் கொண்டு,நமது கவிதைகளும் அத்தகைய புதிய மாற்றங்களை சுவீகரித்துக் கொள்வது அவசியம்.யாருக்காக நாம் எழுதுகிறோமோ, அவர்களுக்கான செய்தியை நறுக்கென்று எடுத்துச் சொல்வதில்,கவனம் கொள்ளவேண்டிய நேரம் இது.

“கோடிக்கால் பூதமடா தொழிலாளி..கோபத்தின் ரூபமடா..!” என்று பாடிய ப.ஜீவானந்தம், 1935-ஆம் ஆண்டில்,கோவை ஸ்டேன்ஸ் மில்லில் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். காலை ஆறுமணிக்கு துவங்கவிருந்த தொழிலாளர் கூட்டத்திற்காக,காலை 5 மணிக்கு ஜீவாவினால் எழுதப்பட்ட பாடல்தான்,

“காலுக்கு செருப்புமில்லை,
கால்வயிற்றுக் கூழுமில்லை..
பாழுக்கு உழைத்தோமடா..
என் தோழனே
பசையற்றுப் போனோமடா..!-- இந்தப்பாடல் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள்.. இதோ,இந்தநேரம் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

சித்திரச்சோலைகளே-உமைநன்கு
சிரத்தையாய்ப் இப்பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ..
உங்கள் வேரினிலே..! -இது பாவேந்தர் பாரதி தாசன் எழுதிய கவிதை


சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா..
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி

[அரசிளங்குமரி.1957] --- இது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களில் ஒன்று.

விரித்துச் சொன்னால் கடலளவு பொருள்தரும் இந்தப் பாடல்களும், கவிதைகளும் புனையப்பட்ட காலத்தில் இருந்த அரசியல்,பொருளாதாரம், கலை,பண்பாடு என பலகூறுகளையும் கணக்கில் கொண்டு,தான் வாழ்ந்த காலத்திற்குத் தேவையானவற்றை,மக்கள் விரும்பும் வடிவத்தில் கொடுத்ததினால்தான்,பாரதியும்,பாரதிதாசனும், ஜீவாவும், பட்டுக் கோட்டையும்.. அவர்களின் வழிவந்த..,நீங்கள் அறிந்த மகத்தான கவிஞர்களெல்லாம்,யுகங்களைக் கடக்கும் சிறகுகளைப் பெற்றுக் கொண்டு,இன்றைக்கும் நம்மோடு உலவிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு தலைமுறையின் வரலாற்றை நமக்கும் கடத்துகின்ற செய்திகளை,இவர்களின் கவிதைகள் உள்ளடக்கமாகக் கொண்டதால்,அவை சாகாவரம் பெற்றவையாகி விடுகின்றன.

இந்த மரபின் தொடர்ச்சியாக நமது எழுத்துத்தளத்திலும் பல கவிஞர்களைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

எப்போதும் காலத்தோடே ஒட்டி இயங்கிக் கொண்டிருக்கும் கே.எஸ்.கலை, வார்த்தைகளால் வசிகரிக்கும் ரமேஷ்ஆலம்,அன்பால் அரவணைக்கும் அகன், கருத்துகவி பாடும் காளியப்பன் எசேக்கியல்,எதிர்பாராத எல்லைகளுக்கு மனதை இழுத்துச் செல்லும் சரவணா,நுட்பங்களுக்குள் புகுந்து உறவாடும் புலமி,வாசிப்பவனை வளைத்துக் கொள்ளும் கிருஷ்ணதேவ், ஆச்சரியங்களுக்குள் நம்மை அழுத்திப்போகும் மனோரெட், தெரிந்த வார்த்தைகளால்,புதிய விஷயங்களை நமக்கு தெரியாமல் திணித்து விட்டுப்போகும் சர்நா,முக்காலத்தையும் ஆட்சி செய்யும் சுசீந்திரன்,கடவுளைக் காதலிக்கும் கவித்தாசபாபதி,கருத்தால் கவரும் ஜின்னா,தேர்ந்த கருவால் மிரட்டும் சுஜய்ரகு,நட்பின் சமீபத்திய வரவுகளாய் கருணாநிதி,ஜி.ராஜன் ..என எனது வாசிப்புவட்டத்திற்குள் சிக்கிக் கிடப்பவர்களின் பட்டியல் மிக மிகப் பெரிது. இன்னொரு சந்தர்ப்பத்தில் இவர்களைப் பற்றியும் இங்கு பகிர்ந்துகொள்வேன்.

தோழர் கவித்தாசபாபதி அளித்த இந்த வாய்ப்பில் சில கவிதைகளை நான் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

தனக்குள் அல்லது தன்னைச்சுற்றி நிகழ்பவற்றை,பிறரையும் கவனிக்க வைக்கிற கலையைக் கற்றவனாகத்தான் கவிஞன் இருக்கிறான்.இந்த விஷயத்தைத்தான் எழுதவேண்டும் என்ற எல்லைகளற்ற பெருவெளியாக கவிதைகள் இருக்கிறது.அது சிறிய அல்லது பெரிய விஷயமாகக்கூட இருக்கலாம்.ஆனால்,நாமும் ஏதோவொரு நேரத்தில் அனுபவித்ததை கலப்பற்ற உண்மையாக,சுவாரஸ்யத்தைக் கூட்டிச் சொல்லும்போது நமது கவனத்தை சட்டென்று கவர்ந்துவிடுகிறது அவனது கவிதை. தலைப்பாலும்,கருவாலும் அட..என்று ஆச்சரியப்பட வைத்த கவிதையாக..,

புஸ்ஸ்ஸ்
------------------
காரமே
அது
பொய்யடா.

வெறும்
காற்றடைத்த
ருசியடா.

புரியாதவர்க்கு
அது
சிப்ஸடா.

புரிந்தவர்க்கு
அது
புஸ்ஸடா. ! ----- ஒரு நகைச்சுவைத் துணுக்கை வாசிக்கும்போது,நாம் ஒன்றிவிடுகின்ற அந்தக் கணத்தை எனக்கு அளித்தது இந்தக் கவிதை.இதனை எழுதியவர் தாகு என்றும் கனா காண்பவன் என்றும் நம்மால் அறியப்பட்ட தோழர். மிகச் சாதாரணமாய் நாம் காண்கின்ற ஒரு விஷயம் கூட கவிதைக்கான தேர்வாக இருக்கமுடியும் என்பற்கு நிரூபணம்தான் இது. பொதுவாக அவருடைய கவிதைகளுக்குள் உலவிவந்த போது, எதனையும் வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு அவருக்குள் இருப்பதை உணர முடிந்தது.

நெத்திலி-எனும் தலைப்பில்
-----------
அம்மா
வைக்கும்
கருவாட்டுக்
குழம்பு.

காரமான
தேன்.
----------------------------------- விவரணை தேவைப்படாத இந்தக் கவிதைக்குள் ஒரு முரண்சுவை மிளிர்கிறது.

வெறுமனே நகைச்சுவைக்காகவோ,தோன்றுவதை எழுதிக் கொண்டுபோவது என்ற விட்டேத்தியான மனோபாவத்தை கொண்டவர் என்றும் அவரை அனுமானிக்க முடியாது.

இதன் சரியான விடையே நீங்கள்- என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையொன்று, ஆழமான தத்துவ விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.

யாருக்கும் தெரியாத
உங்களின் மறுபக்கம்
யாருக்கும் தெரியாமலே
போய்விட்டால்
நீங்கள் யார்.?

எல்லோர்க்கும் தெரிந்த
உங்களை பற்றிய ஒன்று
உங்களுக்கு தெரியாமலிருந்தால்
நீங்கள் யார்?

உங்களுக்கும் தெரியாத
மற்றவர்களுக்கும் தெரியாத
நீங்கள் யார்.? -- ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்திற்கான முகமொன்றும், தனக்கான சுய முகமொன்றும் இருக்கத்தான் செய்கிறது.

சமூகத்திற்காக,அதன் சகலவிதமான உயர்மதிப்பீடுகளுக்கும் தன்னை ஒப்புக் கொடுக்கின்றவன்தான்,தனது சுயமுகத்தோடு இருக்கும் தனிமையில்,வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் அந்த மதிப்பீடுகளை தகர்க்கவும் செய்கிறான். “உங்களுக்கும் தெரியாத,மற்றவர்களுக்கும் தெரியாத நீங்கள் யார்..?” என்ற கவிஞனின் கேள்வி, இருவேறு விதமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மனிதன் உண்மையில்,மனிதன்தானா..? என்றொரு கேள்வியையும் நிறுவிப்போகிறது.

தன்னைப் பற்றியும்,தனது குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே எந்த நேரமும் சிந்திக்க கடமைப்பட்டவனாக இருக்கும் சராசரி மனிதன், அதனைக்கடந்து சமூகத்திற்காகவும் சிந்திக்கும்போது அவன் மாமனிதனாகி விடுகிறான். மாமனிதன் கவிஞனாகவும் இருக்கும்போது, “கவிஞனின் கவியுளம்” காண்பதற்கான வாய்ப்புகளும் அப்போதுதான் வருகிறது. மதம்,சாதி, மொழி..என்ற எல்லைகளற்று ஒட்டுமொத்த மனிதகுலத்தின்பாற்பட்ட,அவனது அக்கறையும் அங்கேதான் வெளிப்படுகிறது.

எதிலும் லாபமே பிரதானம்..என்பதுதான்,புத்திசாலித்தனமான வாழ்க்கை முறை என்று பழகிப்போய்விட்ட நமக்குள் எப்போதும் ஒரு எஜமானன் அல்லது வியாபாரி இருந்துகொண்டு,ஒரு அடிமையை தேடிக்கொண்டே இருக்கிறான்.

அப்படி ஏதேனும் சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் உறுத்தல் ஏதுமின்றி, நம்ககொரு அடிமை சிக்கிட்டாண்டா.. என்று ஆதிக்கம் செலுத்தவும் செய்கிறோம். ஆனாலும்,அந்த அடிமையின் மனநிலையிலிருந்து அவனும் மனிதன்தான் என்று சிந்திக்கக்கூட நாம் மறந்தேவிடுகிறோம்.இவ்வாறான நமது மனநிலையைக் குடைந்து நம்மைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்விகேட்பதாக அமைந்தவொரு கவிதையாக,
"ஆப்கோ ஹிந்தி மாலும் ஹை..!" என்ற தலைப்பிட்ட கவிதையை நான் பார்க்கிறேன்.

"சென்னையில்
பல இடங்களில்
பார்த்திருக்கிறேன்.

எத்தனே ஹிட்லி
வேணும் பையா
என்பதிலிருந்து

ஹிந்தி மாலும்?
என்று முகவரி
கேட்டு நிற்பதுவரை...

பல நேரங்களில்
பலர் இங்கே
அவனும் மனிதன்
என்பதனை மறக்கிறார்..

சல்மான்கானாக வந்து
இறங்கிய அவன்
சக்கையாய்
பிழியப்படுகிறான்.

ஒரு நாவலே எழுதலாம்.
கவிதையில் வைப்பது
கண்துடைப்பாய் தான்.

மெட்ரோ பணி முதல்
வாயில் காப்பாளன் வரை
ஆளெடுக்கும் பிரதிநிதிக்கு
இளிச்சவாயன் அவன்.

சுருள் கதவு திறக்கப்படும்
சடசட சத்தம் கேட்டதும்
பெரும்பாலான
தேநீர் கடைகளுக்கு
முதல் வாடிக்கையாளன்
அவன்.

இரண்டு புகையிலைப்
பொட்டலம் போதும்
மூன்று பகுதிநேரத்தையும்
அவனே பார்ப்பதால்
நடமாடும் எந்திரம்-பல
தொழிற்சாலைகளுக்கு.

எல்லாக் கூட்ட
நெரிசலிலும்
தள்ளிவிடப்படுபவன்
அவன்.

பாக்குக் கறை
புன்னகைக்கு
பின்னால் பல
கண்ணீர்த்துளிகை
மறைத்து வைத்தவன்
அவன்.

பொறுக்கியொருவன்
பெண்ணொருத்தியை
வேண்டுமென இடிக்க
தமிழ் தெரியாததால்
பழிசுமத்தப்பட்டு
அடி வாங்குபவன்
அவன்.

அவன்
நிலாவை இரசித்து
பார்த்திருக்கிறேன்.

அவனின்
ஹிந்தி கவிதைகள்
எனக்குப் பிடிக்கும்.

அவன் அம்மாவிற்கு
உடல்நலம் சரியில்லை.
ஒப்பந்தப் பணியில்
விடுமுறை இல்லையாம்.

கியா கெரு தோஸ்த்..
எல்லா மொழியிலும்
கண்ணீரின் வலி
புரிகிறது.

மனிதர்களை
நேசிப்பாம்.

இதற்கு மேல்
எழுதத் திராணியின்றி
இறுக்கத்துடன்..-கனா காண்பவன்-- வாழ்க்கையின் நெருக்கடி..,ஒரு மனிதனை, உழைப்பாளியை இடம்விட்டு இடம் புரட்டிப்போடும்போது,புதிய இடத்தின் மொழியை அவன் அறியாதவன் என்பதே கூட,மனிதர்களுக்கு எத்தனை விதங்களில் வசதியாகப் போய்விடுகிறது என்று,அவர்கள் படும் வேதனையைச் சொல்லும்போது,கவிதை கண்களை ஈரப்படுத்துகிறது. கவிஞனுக்குள் இருக்கும் இறுக்கம் நம்மையும் மூச்சுத் திணறடிக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தின் எந்தவொரு நகரத்திலும்,கிராமத்திலும்,புதிதாய் அமையவிருக்கின்ற தொழிற்சாலையோ,நிறுவனமோ தங்கள் தேவைக்குத் தக்கபடி,பீகார்,உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மக்களைக் கொத்துக் கொத்தாய் தரகர்களின் மூலம் அள்ளிவருகிறது.இது ஒருவிதத்தில் புராதன கிரேக்க,ஏதென்ஸ் காலத்திய அடிமைவியாபாரத்தின் நவீன வடிவமாய்க் காட்சியளிக்கிறது.

ஒருநாட்டின் பகுதியில் வசிக்கும் மக்கள் சொந்த இடத்தில் வாழமுடியாமல், இவ்வாறான இடமாறுதலுக்கு உட்படுவதன் காரணமென்ன..? இங்கேவந்து அத்தக்கூலிக்கு பாடுபடும் தேவையென்ன..? இவர்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் தான் என்ன..? மேக் இந்தியா என்ற கோஷம் வலுத்துவரும் வேளையில் மத்திய அரசுக்கு பொறுப்பு இருக்கிறதா இல்லையா..? இந்தியாவை வல்லரசாக்குகின்ற வழிமுறையில் இதுவும் ஒன்றா..? அல்லது அம்மாவை மீண்டும் முதல்வராக்குவதற்கு நடைபெறும் பிரார்த்தனைகளுக்கான கூட்டம் கூட்டப்படுகிறதா..? இதில் யாருக்குப் பொறுப்பு இருக்கிறது..? யே..அப்பா.. எத்தனை எத்தனை கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன.

அரசுகள் அசையாமலிருக்கின்ற வேளையில்தான்,கவிஞனின் பொறுப்பு கூடுதலாகிறது. எல்லா மொழியிலும் கண்ணீரின் வலியை அவனால் மட்டும் தான் புரிந்துகொள்ளமுடியும்.அவனுக்கும் நிலவை ரசிக்கும் ஆவல் இருப்பதையும், விடுமுறை இல்லாததால்,நோய்வாய்ப்பட்ட அம்மாவைப் பார்க்கச் செல்ல முடியாத ஒரு மகனின் ஆதங்கமும்,துயரமும் ஒரு கவிஞனைத்தான் முதலில் பாதிக்கும்.அந்த பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவன் எழுதும் வரிகளை வாசிப்பவன் மனதிற்கு கடத்தும்போது, தன்னைச்சுற்றி இருக்கும் துயர்சூழ்ந்த மனிதர்களையும் நேசிக்கக் கற்றுக் கொடுக்கும்.அந்தக் கடமையை மிகக்கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. அதேசமயத்தில் எளிமையான வார்த்தைகளில்,வலிமையான விஷயங்களைப் பேசமுடியும் என்று நமக்கும் உணர்த்துகிறது தாகு எனும் கனாகாண்பவனின் கவிதை.

சிந்திக்கத் தெரிந்தவன் மனிதனாயிருக்கலாம்.ஆனால்,சிந்திக்க வைப்பவன் அன்றோ கவிஞன்.!

இதேபோன்று நல்ல கவிதைகளை நமக்குள் விதைத்துப் போகும் இன்னொரு கவிஞர் வெள்ளூர் ராஜா.

-யுகம் தாண்டும் சிறகுகள் -18-தொடரும்.

----------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (13-Apr-15, 3:24 pm)
பார்வை : 1174

மேலே