கனவே கலைந்து போ பாகம்- 17 துப்பறியும் திகில் தொடர்

முன் கதைச் சுருக்கம்

ஆகஸ்டு இருபது அதிகாலை தொடங்கி ஏழு நாட்களுக்குள் ஆறு பேர் கொலை...உயரதிகாரி ஆனந்த் தலையிடுகிறார்...

...............................................................................................................................................................................................

அன்றிரவு ப்ரியம் அபார்மெண்ட்டை ஆனந்த்தும் முரளியும் ஆராய்ந்தனர். வரதன் படுத்திருந்த வளைவு.... ! அதற்கு வெளியே குப்பைக்கூளம் எரிந்திருந்தது ! வரதனுக்கு பீடி பிடிக்கிற வழக்கம் உண்டே !

முரளி அவரைப் போலவே படுத்துக் கொண்டு கடையில் வாங்கிய பீடியை பற்ற வைத்தார். தீக்குச்சியை தூக்கி எறிந்தார்..

தீக்குச்சியின் நெருப்பு கூளத்தில் பட்டு எரிந்தது. சுருள் சுருளாகப் புகைந்து வெண்ணிற ஆவி புறப்பட்டது - இம்முறை மெலிதாக... ! ! ! .


அங்கே மங்களா ஏஜென்ஸியின் ஒருங்கிணைப்பாளரை பிடித்தது போலிஸ். பஞ்சாபகேசன் இல்லத் திருமணத்தை நடத்திக் கொடுத்தது இந்த ஏஜென்ஸிதான். அதன் ஒருங்கிணைப்பாளர் தன்னளவில் நேர்மையாக இருந்தார்.

“சார், அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில வந்தவங்க கிட்ட மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவை கையெழுத்து வாங்குவேன். என் பக்கத்துல வந்து நின்னு கையெழுத்துப் போடணும்! நாலு தடவை கையெழுத்து இருந்தா, போகும் போது கையில சம்பளம் கொடுத்து அனுப்பிச்சுடுவேன்!
அவ்வளவுதான். ”

“ அப்ப, நீ பக்கத்துல இருந்து பார்த்திருக்கே! உன் கிட்ட வந்த வெளியாட்கள் எல்லோரும் ஆம்பளைங்க தானா? ”

“ வெளியாட்கள், உள் ஆட்கள் எல்லோருமே ஆம்பளைங்கதான் சார்! ”

“ நல்லா யோசிச்சு சொல்லு”

“ சார், யோசிக்க என்ன இருக்கு? இங்க கையெழுத்து போட்டு இங்கேயே யூனிபார்ம் மாத்திட்டு உள்ள போகணும்! பொண்ணு இருந்தா தெரியாதா? ”

அப்படியானால் தான்யா என்பது ஆண்! பெண் வேடம் போட்ட ஆண் ! !!

விசாரணை முடித்து வெளியே வந்த போது இன்ஸ்பெக்டர் மூர்த்தியை தனிமையில் நெருங்கினான் ஒரு ஆள். பஞ்சாபகேசன் வீட்டு பழைய வேலைக்காரன். சம்பள உயர்வு கேட்டதற்காக வேலையை விட்டு நீக்கப்பட்டவன் !

“ சார், ஆறு மாசம் முன்னாடி இந்த பஞ்சாபகேசன் ஸ்கூல்ல படிக்கற ஒரு பொண்ணை கடத்திட்டு வந்து அவங்கப்பாவை பிளாக் மெயில் பண்ணான் ! ”

பெண்ணின் சீருடையை வைத்து பள்ளியைக் கண்டு பிடித்து, பள்ளியை வைத்து பெண்ணை கண்டு பிடித்தால்...

அவள் ஜி.எம். புரொமோட்டர்ஸ் உரிமையாளர் சேகரின் ஒரே மகள் !

சேகரின் மகளுக்கு இனி ஒன்றும் ஆகாது என்று தைரியப்படுத்தி வாக்கு மூலம் வாங்கினர்.

“ ப்ரியம் அபார்ட்மெண்ட்டில பதினாறு வீடு கட்டுறதா பிளான்... அந்த ஏரியாவுல எங்க வீடுங்களுக்கு ஏக டிமாண்ட்... ! ! ஒரு வீட்டை இருபத்தியோரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு வித்தேன். முகமூடி போட்ட ஆள் ஒருத்தன் பணம் கொண்டு வந்து கொடுத்தான். அப்ப வீடு வாங்கின ஒரு குடும்பம் தற்செயலா லாரி விபத்துல இறந்துடுச்சு. அத வச்சு, "ப்ரியம் அபார்ட்மெண்ட்டுல ஆவி நடமாடுது; அங்க எந்த வீடும் சேல்ஸ் ஆகலே; இருக்கற வீடுகளை படிப்படியா விலை குறைச்சி மூணு லச்சத்துக்கு விக்கிற நிலைமைக்கு வந்துட்டேன். அப்பவும் முடியல. அதனால சிறப்புக் குலுக்கல் நடத்தி அதில் ஜெயிக்கிறவங்களுக்கு வீடு பரிசு" ன்னு அறிவிப்பு பண்ணச் சொன்னான்! நான் கேட்கல. என் மகளை கடத்திட்டாங்க! அவங்க சொன்னது மாதிரியே பத்திரிக்கைகளிலே தகவல் பரப்பி, சிறப்புக் குலுக்கல் நடத்தி நந்தினிங்கிறவங்க பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணேன்! அப்புறம்தான் பொண்ணு வீடு வந்தா! என் கம்பெனி பேரு கெட்டது; வீடு புக் பண்ணவங்க அத்தனை பேரும் வீடு வேணாம்னு சரசரன்னு போயிட்டாங்க ! எனக்கு நஷ்டமாச்சு!”

மூர்த்தி வியந்தார். தங்கு தடங்கல் இல்லாமல் போதை மருந்து கடத்த என்னென்ன திட்டம் போடுகிறார்கள்? இதில் ஹாலோகிராம் மாதிரி ஹைடெக் வேறு...

“ புது மாதிரி பிளாக்மெய்லா இருக்கே? சரி, ஒரு பைசா கொடுக்காம வீட்டை அந்தம்மா பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணச் சொல்லாம விட்டானேன்னு சந்தோஷப்படு ! ”

“ ஏங்க, சார் நீங்க? நானும் முதலில் அப்படித்தான் நினைச்சேன்... ! ஆனா, இதுபத்தியோரு லட்சம் கொடுத்து கோடிக்கணக்குல நஷ்டப் படுத்திட்டான் ! ! ! ! ! இன்னி வரைக்கும் என் பிஸினஸ்
நிமிரலே ! ! ! ! !”

“ இது நந்தினிக்குத் தெரிஞ்சு நடந்ததா?”

“அத நந்தினி கிட்டதான் சார் கேக்கணும்! ”

வெளியே வந்து விட்டனர்.

“ நந்தினி லாப்டாப்புல கிடைச்ச இருபத்தி ரெண்டு லட்சம் கணக்கில் வராத பணம் எங்கேன்னு கண்டு பிடிச்சிட்டோம்! அது வீடா மாறி அவங்களுக்கே போயிடுச்சு! ”

“ சார், இது நந்தினிக்குத் தெரிஞ்சு நடந்ததா?” காந்தன் மூர்த்தியிடம் கேட்டார்.

“இது நந்தினிக்குத் தெரிஞ்சு நடந்திருந்தா அவங்களும் போதை மருந்து கடத்தல்ல இருக்காங்கன்னு அர்த்தம்! அப்ப இந்த முருகேசனும் மத்தவங்களும் அவங்க கூட்டாளிங்க! அப்ப வினோதினியைக் கொன்னது யாரு? நோக்கம் என்ன? அவங்க ஆளுங்களையே அவங்க எதுக்குப் பழி வாங்கணும்? ”

“நந்தினிக்குத் தெரியாம நடந்திருந்தா?”

“இருபத்தி ரெண்டு லட்ச ரூபாய் வீட்டை எதுக்கு பஞ்சாபகேசன் நந்தினி பேருக்கு எழுதி வைக்கணும்? - அதுவும் கருப்புப் பணம்! ”

“ நந்தினி பஞ்சாபகேசனுக்குச் சின்ன வீடோ? பஞ்சாபகேசன் குடி வச்ச பொண்ணு போதை மருந்து கடத்தல்ல மூக்கை நுழைச்சிருக்குமோ? இவ தொல்லை தாங்காம இவளைக் கொல்லணும்னு போய் இவ தங்கச்சி மாட்டிட்டாளோ? ”

“ நாம போதை மருந்து கடத்தல்ங்கிற ஒரே கோணத்துல பார்க்கிறோம்.. ! ! அது சரிதானா?.... தான்யாவோ நந்தினியோ நம்ம கையில மாட்டாத வரை எந்த முடிவுக்கும் வர முடியாது! ”

ஏசி ஆனந்த்திடம் தங்கள் கண்டுபிடிப்பைச் சொன்னார்கள்.

“வெல்டன் ” என்றார் ஆனந்த் உணர்ச்சியற்று. “கூடவே இதையும் பார்த்திடுங்க ”- ஒரு பேப்பரை நீட்டினார்.

குணமாகி வீடு வந்து சேர்ந்த நந்தினியின் அக்கா மாலினியின் வாக்கு மூலம்:

ரகசிய விசாரணையில் தங்களுக்கு வினோதினி என்ற தங்கை இருந்ததாகவும், நந்தினியை விட மூன்று வயது சிறியவள் என்றும் அவள் தனது எட்டு வயதில் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.... ! ! ! ! ! ! ! !
“ அ.... அ......அப்படீன்னா? ”
“ வினோதினியோட வாழ்வியல் அடையாளம் ! அவ ஏற்கெனவே செத்துட்டா ! ! ! டிஎன்ஏ ரிசல்ட் மூணு மணி நேரம் பிந்திப் பிறந்த தங்கச்சியோட சொதப்புமே ஒழிய மூணு வருஷம் பிந்திப் பிறந்த தங்கச்சியோட சொதப்பவே சொதப்பாது ! ! ! ! ! இது கரூரிலிருந்து நம்ம நாராயண சாமி .... இவர் சொல்றதையும் கேட்டிடுங்க ! ”

வாய்ஸ் மெயிலை இயக்கினார்.

“ சார், கரூர்ல வயசான பெரியவர்; நந்தினியோட அம்மாவுக்கு சித்தப்பா முறை; இவரும், நந்தினியோட அப்பாவும்தான் குழந்தை வினோதினியோட பிணத்துக்கு ஈமச்சடங்கை ராமேஸ்வரம் கரையில வச்சி செஞ்சாங்களாம்... ”

வாய்ஸ் மெயிலை நிறுத்தினார்.

“ ஐயையோ ! ! ! சார்..........சார்..........?? ”

“ ஆகஸ்டு இருபதாம் தேதி ராத்திரி செத்துப் போனது நந்தினி ! ! ! ! ! ! ! ! ”

“அப்ப பிரசாத் நம்ம கிட்ட பொய் சொல்லியிருக்கானா? ”

“பிரசாத் நம்ம கிட்ட பொய் சொன்னானா? நந்தினி பிரசாத் கிட்ட பொய் சொன்னாளான்னு நாமதான் கண்டு பிடிக்கணும்........”

அப்ப மத்தவங்க பார்த்தது? ரெண்டு பேரைப் பழி வாங்கியது? – மூர்த்தியின் தலை சுற்றியது.

“ நந்தினியோட ஆ....ஆ....ஆவியா ? ! ? ! ! ? ! ! ! ! ! ”


தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (14-Apr-15, 5:49 pm)
பார்வை : 335

மேலே