வினாக்காலம் -ரகு
வெகுநேர்த்தியாய் அடுக்கி
அலங்கரிக்கப்பட்ட வினாக்கள்
நிரம்பி வழியப் புலர்ந்தது
என் பொழுது
அர்த்தமுள்ள வினாக்கள் பிறக்க
விழிபிதுங்கிய தூக்கத்தைப்
புறமுதுகிடச் செய்திருந்தன
நாழிகையின் விழிப்பு நிலை
வெகுண்டெழுந்த வினாக்களின்
பொறியில் தகித்துத் துடித்தின
கடந்தகாலத் தவிப்புகளும்
தொடர் தோல்விகளும்
வினாக்கள் விடைகளாய்
மருவிவரும் தருணங்களுக்கென
தவமிருக்கவல்ல புங்கையானது
கழிந்த இரவெனக்கு
எனக்கானதாகவும்
பிறர்க்கானதாகவும் சேகரமாகி
கனவுகளுக்குக் கதவுகள் திறப்பதாக
சாஸ்திர சத்தியமிட்டிருந்தன
அறிவேந்திய வினாக்கள்
வைகறைச் சேட்டைகளில்
குதூகலிக்கும்
அணிகளில் ஒருவனாய்
ஓடுகிறேன் கிழக்கு நோக்கி
என்றுமில்லாத
ஆரவாரத்தோடு ஒளி ஓவியமாய்
ஊர்வலம் தொடங்கிய
சூரியப் பார்வையின் பிரமிப்பில்
ஒரு கை இறுகப்பற்றியிருந்தது
என்னை
அது அர்த்தமுள்ள
வினாக்களின் விழிகள் பேசிய
நம்பிக்கை !