பிருந்தாவன ராதைகள்
பிருந்தாவனம் தேடி இந்த
ராதைகள் வரவில்லை
ராவணர்களான பந்தங்களில்
ஒருவரே பரிதவிக்கவிடுகின்றனர்!
தியாகமே வாழ்க்கையாய்
திகழ்ந்தவளை தாயென மதியாமல்
தொலைத்துப் போகின்றனர்!
புதிதாய் ஒரு சிநேகம்
பூத்ததும் பழையத் துணியை
பாத்திரக்காரனுக்குப் போடுவது போல்
பிருந்தாவன ஆசைக் காட்டி கணவனே
பரிதவிக்க விட்டுச் செல்கின்றான்!
தமக்கையின் சொத்தை
தன் சொத்தாக்கிக் கொள்ள
தமக்கையையோ
பிருந்தாவன் பிராகாரச்
சொத்தாக்கிச் செல்கின்றனர்!
பாட்டியின் சொத்தில்
பேரன் படாடோபமாய் வாழ
பாட்டியோ பிருந்தாவனக் கண்ணனுக்கு
பாட்டியாகிறாள்!
விதவைகள்,திக்கற்றவர்கள் என
இப்படி இங்கே
இவர்கள் சேர்ந்ததால்
பிருந்தாவனமே
அநாதைகள் ஆலயமாகி விட்டது!
பந்தங்கள் எல்லாம்
வசந்தங்கள் தேடி
சொந்தங்களை அறுத்து விடுவதால்
அப்பாவிகள் என்றுமே
அக்கிரமத்தின் பிடியில்!