வந்த வழி மறந்து
கருவேலங்காடுகள்
சுள்ளி பொறுக்கி
சுமந்து சென்ற அவள்
வாழ்வின் வலிகளை
வாசிக்கும் மறவாது ...
கட்டுச்சோறும்
கருவாட்டு வாசமும்
கழனிமேடெங்கும்
காற்றோடு கலக்க
கன்னியவள் பருவத்து
கையுருண்டை பிடித்த
சுகமான நினைவுகளுடன்
கழியுது அவள் காலம் ...
தன்பாதத்தில் தைத்த
முட்களின் வடுக்களைவிட
தன் பாசங்கள் தைத்த
முட்களின் வலிகளாலே
முழுதாய் மரித்தவளவள்...
சுருக்கங்கள் முகம் மறைக்க
சுருக்குகள் தேடும் மனதை
சுடு நெருப்பிலிட்டு
சும்மாதானிருக்கிறாள்
சுடுகாட்டை வெறித்தபடி ...
இருப்பது பாரமென
பிறப்புகளெல்லாம் விட்டுவிட்டு
தன் வம்சத்தை
கொஞ்சித் திரிகின்றன
வந்த வழி மறந்து ...!
-------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்