தென்றலின் அழகு

தென்றலின் அழகு

துளிர்க்கும் இலையை அசைத்து - பின்னர்
துடைப்பாய் தூசியை மெல்ல!
பறக்கும் தும்பியின் சிறகை - அசைத்தே
திருப்பிடு வாய்நீ திசையை!

சூரிய காந்திப் பூவை - திருப்பி
சிரிப்பாய் தென்றல் நீயோ!
மோதி முத்தம் தருவாய் - தாயின்
முகம்போல் இனித்திடு வாயே!

சூரியன் சுட்டெரித் தாலும் - என்னை
சுழன்று குளிர்த்தரு வாயே!
இளைஞர் சிகையை சிலுப்பி - பின்னர்
இயல்பாய் அமைத்திடு வாயே!

எழுதும் தாளினைக் கிழிப்பாய் - குழந்தை
எடுக்கும் பொழுதோ சிரிப்பாய்!
குரும்பு உனது தொழில்தான் - உன்மேல்
கோபம் எவரும் கொள்ளார்!

இலவச ஊஞ்சல் ஆட்டி - பறவையை
இன்பத் திலாழ்த் திடுவாயே!
வானில் பறக்கும் போதும் - மேலும்
ஆற்றல் தந்து மகிழ்வாய்!

கூட்டின குப்பை எல்லாம் - மீண்டும்
குதித்து கிளைப்பிடு வாயே!
சும்மா இருக்க மாட்டாய்? - என்று
சொல்லி உன்னை மகிழ்வார்!

ஓடிப்போ யனைப்பாய் தீயை - கொதிக்கும்
உலையை அடக்கிடு வாயே!
ஊதி சமைத்திடு வாறே - எங்கள்
ஊரில் பாதி மக்காள்!

ஏழை மக்கள் வாழ்வில் - நீயோ
என்றும் மகரா சன்தான்!
எனக்கும் உன்னைப் பிடிக்கும் - சாதி
உனக்குப் பிடிக்கா தென்பதால்!

சேரிக் குள்ளும் செல்வாய் - அந்த
செங்கோட் டையிலும் இருப்பாய்
சாதி பேத மில்லா - வீசும்
தென்றல் என்றும் வாழி!

பார்த்திபன். ப
17/04/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (17-Apr-15, 12:42 pm)
Tanglish : tendralin alagu
பார்வை : 112

மேலே