வெள்ளந்தி மனசு =0=குமரேசன் கிருஷ்ணன் =0=

மரணத்தின் செய்திவர
மரணித்த மனிதரின்
மலரும் நினைவுகளுடன்
சொந்தங்களை நாடி
சொந்தங்களுடன் சென்றோம் ...

காரியங்கள் முடிந்தபின்
வாரிசுகளின்
வருத்தங்களில் கலந்துவிட்டு
வந்தவழி பயணித்தோம் ...

பழைய ஊரை கண்டவுடன்
பாதிவழியில் சித்தப்பா
பால்ய நண்பர் கருப்பசாமியை
அலைபேசியில் அழைக்க
வண்டியை நிறுத்த ...

அதுவரை அமைதிகாத்த
என் மனைவி
ஆவாரம்பூ கொய்ய
ஆவலுடன் இறங்க ...

இலந்தப்பழங்களை பறித்து
இதய நினைவுகளில்
மூழ்கினேன் நான் ...

ஒத்துழைக்க மறுத்த
வண்டிப் பயணத்தால்
வாந்தி எடுத்துப்பின்
வாடி நின்றார் பெரியம்மா
வாடிய முகத்துடன் ...

அவரை ஆசுவாசபடுத்திவிட்டு
அம்மாவும் ..சித்தியும்
அத்தானும் ..தங்கையும்
அடுத்தடுத்து இறங்கி
கிணற்று நிழலில்
கிராமத்து வாழ்விற்குள் நுழைய ...

ஐந்து நிமிடத்தில் வந்தாரவர்
ஐம்பதைக் கடந்த இளைஞர்
அத்தனை சுறுசுறுப்பு ...

குளிப்பதற்கு பம்புசெட்டை
இயக்கிவிட்டு ...
குளித்துமுடித்து உடைமாற்றி
வருவதற்குள் ...

சடசடவென அருகிலிருந்த
தென்னை மரமேறி
ஐந்தாறு குலைகளை
வெட்டி வீழ்த்திவிட்டு
விறுவிறுவென்று இறங்க
விக்கித்து நின்றேன்
விழிதிறந்து ...

சிலநொடிகளில்
சிறுவிருந்தாய்
இளநிகளை கொம்புசீவி
அன்புகளோடு
அவர் தர ...

இளநீர் ...பருகிவிட்டு
இதயத்தால் நன்றி நவிழ்ந்துவிட்டு
விருப்பமின்றி
விடைபெற்றோம் அவரிடமிருந்து ...

''இவ்வளவு பேரும்
இவ்வளவு தூரம் வந்துபுட்டு
வீட்டுக்கு வராம போறீகளேவென்ற ''
வெள்ளந்தி மனிதரின்
வெள்ளை உள்ளத்தை ...

நிதமும்
முகமூடியணிந்த
முகம் தொலைத்த நகரத்து
மனிதர்களுக்கு
மத்தியில்
தேடித்திரிகிறேன்
தேம்பலுடன் ...நான் ...!
----------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (21-Apr-15, 12:40 am)
பார்வை : 346

மேலே