சிந்தையில் உள்ளதை செப்பினேன்

​அனுபவம் வாசிக்குது அனுபவத்தை
அயர்ந்திட்ட உழைப்பும் சிரிக்குது ....
சிந்தனையில் ஓடுது பின்னோட்டம்
சிந்தையில் நிகழுது வெள்ளோட்டம் !

அமர்ந்திட்ட ஆற்றலும் அறிவும்
அடிமேல் அடியாய் அசைகிறது ....
நடந்து முடிந்திட்ட காட்சிகளோ
கடந்து செல்கிறது கண்முன்னே !

அகவை முதிர்ந்தாலும் புன்சிரிப்பு
அளவை குறைக்காத பூரிப்பு ....
படங்களே பாடமாகும் வாழ்விலே
பாடமாக படித்திடும் ஒருபுத்தகம் !

அடுக்கடுக்காய் ஆயிரம் தோன்றுது
அர்த்தமுள்ள ஆழ்ந்த பார்வை ....
தளர்ந்திட்ட மேனிதான் ஆனாலும்
தளர்ந்திடா சிந்தனைதான் தாய்க்கு !

பக்கங்கள் படித்து அறிவதைவிட
படங்கள் கூறுது பலபாடங்கள் ....
படித்திடும் பழக்கமோ குறைகிறது
படிப்படியாய் பாரினில் மறைகிறது !

பணம்ஒன்றே பாதையென இன்று
மனங்கள் செல்கிறது மண்ணிலே ....
சீரில்லா நோக்கமுள்ள சிந்தையால்
சீர்கெடுகிறது சமுதாயம் வேகமாய் !

சாதிமதமென சகதியில் விழாதீர்
சாதிக்க இயலாது அதனாலே ....
சாதனைகள் படைத்திட ஒன்றிடுவீர்
சாதிக்க முயல்வதில் வென்றிடுவீர் !

சிந்தியுங்கள் உலகோரே உள்ளவரை
சிதறவிடாதீர் உள்ளத்தை சிறிதும் ....
சிறப்போடு வாழ்ந்திடவே வையகத்தில்
சிந்தையில் உள்ளதை செப்பினேன் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Apr-15, 7:18 am)
பார்வை : 200

மேலே