மழையென்பது யாதென-2

ஊரோரக் குட்டையில்
இப்போதே பசையாகிக்
கிடக்கும் அம்மண் என
நனைந்தவாறு சுரண்டி
சிரட்டையில் நிரப்பி...

உச்சித் தொடும் முன்
வெட்டிப் பூசப்பட்டதாய்
இரு மொட்டைக்கல் நிற்கும்
சுடலைக் கோயிலில் ஒதுங்கியது..
♪♪♪
அளவு கணக்கீட்டில்
தவறான விடை சொல்லி
கனகய்யா வாத்தியாரிடம்
ஆறுமுறை அடிவாங்கி
கைகள் வீங்கிய முத்துசாமி,

நில்லுல போலாம் என
சேக்காளி ஐயனாரை
டவுசரை பிடித்திழுத்து
மழை நிற்கும் வரையல்ல
வெட்டாங்குளத்தில் வேகமாய்
அவருயரம் தாண்டா அளவு
நீ்ர் நிரம்பும் வரை..

இமைக்கா இமைகளை
கண்களுக்கு சின்னக் கூரையாக்கி
சரியான அளவு பார்த்து
இப்போ வா என இறங்கிவந்த
வீரச் செயலை எங்களிடம் வந்து
பீத்திக்கொண்டது..
♪♪♪
சொட்டொழுகும் இடத்தில்
சட்டியொன்று வைத்து
வாசலை சிறு குளமாக்கும்
சாரலுக்கு பழைய கோணி போட்டு

உள்காட்சிகள் பொய்யாகலாம்
சத்தங்கள் அது பொய்யாகலாம்
என்ற பொய்யான சந்தேகத்தோடு
நின்றதா என்று பார்க்கும்
நொண்டி சாக்குவைத்து...

கொஞ்சமாவது நனைய
அடிக்கடி வெளியே வந்து
கருணம்மா கிழவியிடம்
திட்டு வாங்கும் அந்த
எதிர் வீட்டு சின்னாயி அக்கா..
♪♪♪
இது போன்ற நினைவுகள்
அவளுக்கும் இல்லையெனில்..

இரு கைகளால் இறுகப்பற்றிய
ஒரு தேநீர்க் கோப்பையோடு
கண்ணாடிச் சாளரத்தில்
தலைசாய்த்து வெதுவெதுப்பாக..

விரல்களில் பரவும் சூட்டிற்கு அல்லாமல்
காற்று எழுதும் கவிதையாய்
விழிகளை நெருங்கும் கூந்தலை
ஒதுக்கிச் செவிமேல் சிறையிட..

இடது கையை எடுத்து
எடுத்த பணி முடித்து
மரங்களுக்கு மேலுயர்ந்த
ஒன்பதாவது மாடியில்..

தனியறை ஒன்றில்
தூரத் தெரியும் கூவத்தை
ஒப்பனைச் செய்யும்
துளிகளை இரசிக்கும்
அவளிடம் ஒருமுறையாவது
சொல்லிவிட வேண்டும்
மழையென்பது யாதென..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (21-Apr-15, 7:19 am)
பார்வை : 107

மேலே