உனக்கு புள்ளை பொறக்காதுடா -Mano Red

எட்டு நாள் வளர்ந்த தாடி ,ஒரு பக்கம் ஏறி இறங்கியிருந்த சட்டையின் கை மடிப்புகள்,
கலைத்து சீவப்படாத தலை மயிர், மாற்றி அணிந்திருந்த செருப்புடன் புலம்பிக் கொண்டே தள்ளாடி வந்து கொண்டிருந்தான் குமார்.!! (தண்ணி அடிச்சுருந்தா தள்ளாட தானே செய்வான்)..

அம்மா பெயர் காவேரி ..கணவனை இழந்து விட்டு கட்டிட வேலை செய்து மகன் குமாரை வளர்த்து ஆளாக்கியவள்..!! படிக்குற காலத்தில் அவனும் ஊர் சுற்றியவன் தான் ...ஆனால் படித்து முடித்த பின்பும் ஊர் தான் சுற்றுவான் என்று முன்னமே காவேரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..!!

எந்த வேலையிலும் உருப்படியாய் இருப்பதில்லை ,கேட்டால் இருப்பவனுக்கு ஒருவேலை இல்லாதவனுக்கு பலவேலை என வியாக்கியானம் பேசுவான்..!!தான் தான் அதிமேதாவி என்ற நினைப்பும் தனக்குத்தானே நியாயமும் பேசி வெட்டியாய் தான் அன்று வரை சுற்றி திரிந்தான் ..!!

அன்றும் அப்படிதான் அவன் வெட்டியாய்ய்ய்ய்ய் ...
தெருவின் முச்சந்தியில் அரசமரம் ,வேட்டி ,திருநீறு ,வாழைபழம் ,சூடம் ஒரு பிள்ளையாருடன் சேர்ந்தவாறு ஒரு திண்ணை வெட்டியாய் பேசுபவர்களுக்கென..!!
குமார் அதில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டே எப்படி உருப்படலாம் என கற்பனைக் குதிரையில் வேகமாய் பயணித்துக் கொண்டிகிருக்கையில் ஒரு குரல் ...
தம்பி......!!

தியானம் கலைந்தவன் போல கோவமாய் ஏறிட்டு என்னய்யா வேணும் என்றான்..??
நான் கிளி ஜோசியக்காரன் ஊருக்குள்ள போகணும் வழி சொல்லணும் என்றான்..!!

உடனே இவனுக்கு என்ன தோன்றியதோ எனக்கு முதலில் ஜோசியம் சொல்லு உன்னை பரிசோதித்து விட்டு தான் ஊருக்குள்ளே அனுப்புவேன் ..ஏன்னா இந்த ஊரே என்ன நம்பி தான் இருக்கு அப்படின்னு அள்ளி விட்டான் ...!!

ஜோசியக்கரனும் மனசுக்குள்ள ஜோசியம் பழகுவதற்கு நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்னு கடையை தொடங்கினான்...சிலபல சாமி பெயர் சொல்லி சீட்டு கட்டுகளை விரித்து கிளியை திறந்து விட்டான்..கிளி குமாரை வெறிக்க பார்த்துவிட்டு நகர்ந்து வந்து சீட்டை கிளறியது ..!!

ஊரை காக்கிற நம்ம தம்பிக்கு நல்ல வழிய காட்ட நல்லதா ஒன்னு எடுத்துக் கொடுன்னு கிளிக்கு ஆணையிட்டான் ஜோசியக்காரன் ..!!

இவனுக்கு மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம் என்ன தான் வருமோ ..??
கிளியின் பார்வை சற்று ஏளனமாகவே இருப்பதை உணர்ந்தான் குமார்...கிளியும் கீச் கீச் என்றில்லாமல் ஹி ஹி என்று கத்துவது போலவே கேட்டது..!!

கிளி எடுத்து கொடுத்ததை பிரித்து பார்க்கும் நொடியில் அத்தனை கடவுளும்
குமாரின் மனதில் வந்து போயினர்.
அழகிய பருவப் பெண் படம் வந்ததை பார்த்து திருமணம் முடித்தால் நீ நினைத்த எல்லாமே நடக்கும் என்று சொல்லிவிட்டு எழுந்து போனான் ஜோசியக்காரன் ..!!

ஒரே யோசனையுடன் அம்மா காவேரியிடம் சென்று திருமணம் முடித்து வைக்குமாறு அவசரபடுத்தினான்..!!
கிறுக்கு பிடித்திருக்குமோ என்று ஒருமாதிரி பார்த்துவிட்டு இவனுக்கும் வயதாகி விட்டதே முடித்துவிடலாம் என்ற எண்ணத்திலே தலையை ஆட்டிவிட்டாள்..!!

26 வயதாகியும் வேலை வெட்டி இல்லாதவனுக்கு எவனுமே பெண் தர தயாரில்லை என்று தெரிந்தும்,துணிச்சலாய் பெண் தேடினார்கள் ஏமாற்றமே மிச்சம் அவர்களுக்கு..

பக்கத்துக்கு ஊருல அப்பா இல்லாத ஒரு பொண்ணு பத்து வர படிச்சுட்டு சும்மா தான் அவங்க அம்மா கூட இருக்கு போய் பாருங்கன்னு எவனோ சொல்ல ரெண்டு பேருமே அலங்காரமா கிளம்பி போனாங்க..!!

மாட்டு தொழுவத்தில் இருந்த பெண் இவர்களை பார்த்தவுடன் கை கழுவி விட்டு என்ன வேணும் என்று கேட்டாள்...(நீ தான் வேனும்ம்னு மனசுக்குள் குமார் சொன்னது அவளுக்கு கேட்டிருக்காது ).
உங்க அம்மாவ கூப்பிடுன்னு காவேரி சொன்னதும் ஓடிபோனாள் அவள்..

திருமண எண்ணம் பற்றி எல்லாம் பேசி முடித்த பின் வெட்டி பயல நம்பி என் பொண்ண தர மாட்டேன்னு சொல்லி பெண்ணின் அம்மாவும் மறைந்துவிட்டாள்..!!

இவனை வைத்துக் கொண்டு காவேரி என்ன செய்வாள் ,அழுகாத குறையாக காவேரியுடன் சண்டை போட்டு விட்டு அவனும் கோவமாய் கிளம்பி விட்டான்..
அவன் போன வேகம் பழக்கமில்லாத மதுபான கடையை நோக்கி..(சோகமானால் அங்கு தான் போக வேண்டுமென எதாவது தமிழ் சினிமா பார்த்து தெரிந்திருப்பான் )

அவன் இதற்குமுன் வராத இடம் ..என்ன செய்ய வேண்டுமென்றே தெரியாமல் அளவின்றி கிடைத்தவரை குடித்து விட்டு தெருவில் புலம்பியே வந்துகொண்டிருந்தவன் எதிரே வந்த பெண் ஒருத்தி மேல் மோதி விழுந்து தரையில் கிடந்தான் ..!!

அவளுக்கு வந்த கோவத்தில் குடிகார நாயே கண்ணு தெரியலையா உனக்கு ..மாடு மாதிரி வந்து இடிக்குற ..உனக்கு அக்கா தங்கச்சி யாரும் இல்லையா ..??என வழக்கமான சாடல்களில் திட்டி தீர்த்து விட்டு இறுதியாக ஒரு சாபமிட்டாள்..!

பொம்பளைகள இடிக்குற உனக்கு கல்யாணமே ஆகாது டா ..எவனும் உனக்கு பொண்ணு தர மாட்டான்..அப்படியே கல்யாணம் ஆனாலும் உனக்கு புள்ளை பொறக்காதுடா ன்னு கேவலாமா கோவமா திட்டி கடந்து போனாள்..!!

அவனும் ஒருவாறு எழுந்து சென்று பேருந்து நிறுத்தம் அடைந்தான்..!!
குடித்தவரை எல்லாம் மறந்தாலும் புள்ளை பொறக்காதுடா ன்னு அவ சொன்னது இன்னும் அவன் மனசுல அப்படியே கேட்டு கொண்டுதானிருந்தது..!!
பேருந்து வந்ததும் ஏறி கடைசிக்கு முன் இருக்கையில் அமைதியாக அமர்ந்து விட்டான் ..!!

மதுவின் நெடி உடல் விட்டு போகாததில் யாரும் குமாரின் அருகில் அமர முன்வரவில்லை..!

அவன் ஏறியதில் இருந்து சரியாக மூன்றாவது நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் கையில் கூடையுடன் தடுமாறியே ஏறினாள்...இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் ஒரு கம்பியின் உதவியில் நிற்க ஆரம்பித்தாள்..!!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குமாருக்கு இடித்த பெண் சொன்ன வார்த்தை "உனக்கு புள்ளை பொறக்காதுடா " என்பது மீண்டும் காதில் கேட்க தொடங்கியது ..!!

என்ன நினைத்தானோ தெரியவில்லை அதிர்ச்சியுடன் தான் எழுந்து கர்ப்பிணி பெண்ணுக்கு இருக்கை கொடுத்து ,மாற்றி அணிந்திருந்த செருப்பை சரி செய்துவிட்டு பேருந்தில் இருந்து எதையோ கற்று கொண்டது போல் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தான் ..!!

-----------------------------------------------------மனோ ரெட் -----------------------------------------------------------

எழுதியவர் : மனோ ரெட் (21-Apr-15, 11:12 am)
பார்வை : 378

மேலே