மெய்யா பொய்யா

மெய்யா?பொய்யா?
================================================ருத்ரா

நிலவைச் சொன்னார்கள்
உன் நிறம் காட்ட.
ஆம் உன் கூந்தல் அடர்ந்த கருப்பு
என தெரிந்து கொண்டேன்.
அன்று அமாவாசை அல்லவா!

கடலைக் காட்டி
உன் மன ஆழம்
பார்த்துக்கொள் என்றார்கள்.
கரையில் கிடந்த கிளிஞ்சல்கள் கூட‌
வாய் திறந்து எதுவும்
காட்டவில்லையே.

பூவைக்காட்டி
காத்திரு என்றார்கள்
பட்டாம்பூச்சி சிறகுகளில்
இமை பட படக்க‌
பார்வை வீசுவாய் என்றார்கள்.
பூச்சி தான் வந்தது
வண்ணம் இல்லை
அவள் எண்ணம் இல்லை.
பூ முழுதும் சஹாரா ஆனது.

வானம் காட்டி
எழுத்துகள் கூட்டிச்சொன்னார்கள்.
நட்சத்திரம் ஒவ்வொன்றும்
நீ எழுதிய‌
காதல் கடிதமாம்.

இரவு முழுதும்
மொட்டை மாடியில்
மல்லாந்து கிடந்தேன்.
ஹப்பிள் டெலஸ்கோப்
உரித்துக் காட்டிய‌
"ஆண்ட்ரோமிடா" நெபுலா போல‌
அகலமாய்
அவள் வியப்பைக்காட்டினாள்

என்னைப் புரிந்து கொள்ள‌
இப்படி ஒரு
விண்ணைத்தாண்டியா வரவேண்டும்?
அன்று நான்
ஒரு மெல்லிய முறுவல் கோடு
வீசியதில் இன்னுமா
நீ மெய்சிலிர்க்கவில்லை?

என்ன செய்வது?
காதல் என்பது
மெய்யா? பொய்யா?

==========================================

எழுதியவர் : ருத்ரா (21-Apr-15, 9:15 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 120

மேலே